Published : Mar 26, 2025, 09:24 AM ISTUpdated : Mar 26, 2025, 12:08 PM IST
அமெரிக்காவின் பதில் வரி விதிப்பு நெருங்கும் நிலையில், அமெரிக்க வர்த்தகக் குழு டெல்லிக்கு பேச்சுவார்த்தைக்காக வருகிறது. பல பில்லியன் டாலர் வர்த்தகம் சம்பந்தப்பட்டிருப்பதால், சுமூக தீர்வு காண இரு நாடுகளும் முயல்கின்றன. 2025க்குள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மார்ச் மாதம் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இது அடுத்த கட்ட நகர்வாக அமையும்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் பதில் வரி விதிப்புக்கான காலக்கெடு நெருங்கி வருவதால், அமெரிக்க வர்த்தகக் குழு ஒன்று முக்கியப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியாவுக்கு வர உள்ளது. பல பில்லியன் டாலர் வர்த்தகம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், இரு நாடுகளும் சுமூகத் தீர்வு காண முயல்கின்றன. அதிகரித்து வரும் பொருளாதார பதட்டங்களைத் தவிர்க்கும் வகையில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24
US reciprocal tariff on India
ஏப்ரல் 2 முதல் பதில் வரி விதிப்பு அமல்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த இந்தியா மீதான பதில் வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் துணை வர்த்தகப் பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்கக் குழு ஒன்று, டெல்லிக்கு வந்து முக்கியமான இருதரப்பு வர்த்தக விவாதங்களில் ஈடுபட உள்ளது.
அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை சரிசெய்யும் முயற்சியாக, இந்தியா உட்பட அனைத்து வர்த்தக கூட்டாளிகளையும் குறிவைத்து, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் பதில் வரி விதிப்பு திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். இந்தியா உள்பட பல நாடுகள் தற்போது அமெரிக்கப் பொருட்கள் மீது அதிக வரியை விதித்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுடனான வர்த்தக உறவுகளை மேற்பார்வையிடும் லிஞ்ச், மார்ச் 25 முதல் 29 வரை இந்தியாவில் இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என்று அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். 2025ஆம் ஆண்டின் வசந்த காலத்திற்குள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்காவும் இந்தியாவும் இலக்கு வைத்துள்ளன.
சென்ற மார்ச் 4 முதல் 8 வரை வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலின் உயர்மட்டக் குழு அமெரிக்காவிற்குச் சென்றபோது இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் அடுத்த கட்ட நகர்வாக டெல்லியில் நடக்கும் இருதரப்பு விவாதங்கள் அமையும் எனக் கருதப்படுகிறது.
44
Donald Trump's reciprocal tariff
பியூஷ் கோயல் கருத்து:
இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்து தெரிவித்த பியூஷ் கோயல், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
"இரு நாட்டுத் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்தியா - அமெரிக்கா இடையே விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவதற்கு வர்த்தகம் மற்றும் பொருளாதார களங்களில் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா உறுதியாக உள்ளது" என்று கோயல் கூறினார் .
"இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும், வரவிருக்கும் அமெரிக்கக் குழுவுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை எதிர்நோக்குகிறோம்" எனவும் கூறினார்.