How to Recover Lost Belongings in Train: ரயிலில் இருந்து இறங்கும்போது அவசரத்தில் சிலர் தங்கள் உடமைகளை மறந்துவிடுவது உண்டு. அப்படி மறந்த பொருட்களைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகளை விரிவாகப் பார்க்கலாம்.
ரயில் மதாத் என்பது இந்திய ரயில்வேயின் ஒரு பிரத்யேக புகார் தீர்வு தளம். இதில் பயணிகள் டிக்கெட், சுகாதாரம், பாதுகாப்பு, மற்றும் ரயிலில் மறந்த பொருட்கள் குறித்து புகார் அளிக்கலாம். இந்த சேவை 24 மணி நேரமும் செயலி அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இயங்குகிறது.
ரயிலில் பொருளை மறந்தவுடன், ரயில் மதாத் செயலியில் உங்கள் PNR எண்ணை உள்ளிட வேண்டும். பிறகு, தொலைந்த பொருளின் விவரங்களைக் கொடுத்து புகாரைச் சமர்ப்பிக்கவும். நீங்கள் புகார் செய்த உடனேயே, அந்த ரயில் செல்லும் பாதையில் உள்ள அதிகாரிகளுக்குத் தகவல் சென்று, அவர்கள் தேடும் பணியைத் தொடங்குவார்கள்.
ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் கூட கவலைப்படத் தேவையில்லை. ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்றும் (https://railmadad.indianrailways.gov.in/madad/final/home.jsp) இதே முறையில் புகார் அளிக்கலாம். நீங்கள் புகார் பதிவு செய்ததும், சம்பந்தப்பட்ட ரயில்வே பிரிவுகளுக்குத் தகவல் அனுப்பப்படும். எவ்வளவு விரைவாகப் புகார் செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு பொருள் திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
செயலி அல்லது இணையதளம் மூலம் புகாரை பதிவு செய்ய தெரியாதவர்கள் காவல்துறை உதவி என்னை அழைக்கலாம். ரயில்வே ஹெல்ப்லைன் 139 என்கிற எண்ணை அழைத்து உங்கள் புகாரை பதிவு செய்யலாம் அல்லது RPF உதவி எண் 182 ஐ தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் பொருள் ரயில்வே துறையிடம் பாதுகாப்பாக இருப்பது உறுதியானால் ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாளச் சான்று மற்றும் நீங்கள் பயணத்திற்கான பயணச் சான்றுகள் (ரயில் டிக்கெட்) மற்றும் தொலைந்த பொருட்கள் உங்களுடையதுதானா என்பதை நிரூபிக்க உரிமைக்கான ஆதாரம் ஆகியவற்றை காட்ட வேண்டும்.
பயணிகள் தாங்கள் இறங்கிய ரயில் நிலையத்தில் அல்லது ரயில் சென்றடையும் அடுத்த முக்கிய நிலையத்தில் நேரடியாகப் புகார் செய்யலாம். ஸ்டேஷன் மாஸ்டர், லாஸ்ட் பிராப்பர்ட்டி கவுன்ட்டர், அல்லது ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) இந்த புகார்களைப் பெற்றுக்கொள்வார்கள். அதன் பிறகு, அதிகாரிகள் பொருளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பார்கள்.
68
பொருள் கிடைக்காவிட்டால் என்ன செய்வது?
சில நேரங்களில் பொருள் உடனடியாகக் கிடைக்காமல் போகலாம். அப்போது, பயணிகள் RPF-யிடம் FIR பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். FIR பதிவு செய்த பிறகு, அதிகாரிகள் ரயிலின் முழு பயணப் பாதையிலும் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்துவார்கள். பெரும்பாலான வழக்குகளில், தொலைந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
78
பயணிகளுக்கு உதவும் டிஜிட்டல் சேவை
ரயில்வேயின் டிஜிட்டல் சீர்திருத்தங்களில் ஒன்றான 'ரயில் மதாத்' சேவை பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. முன்பெல்லாம், தொலைந்த பொருளுக்காக ஸ்டேஷன் ஸ்டேஷனாக அலைய வேண்டியிருந்தது. இப்போது, சில நிமிடங்களிலேயே ஆன்லைனில் புகார் செய்து உதவியைப் பெறலாம். எனவே, ரயிலில் பொருளை மறந்தால் பயப்பட வேண்டாம்.
88
தாமதம் செய்தல் கூடாது
தொலைந்த பொருட்கள் மீட்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே (பொருட்களின் தன்மையைப் பொறுத்து 24 மணி நேரம் முதல் சில மாதங்கள் வரை) ரயில் நிலையத்தில் Lost and Found பிரிவில் வைக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு அவை பொது ஏலத்திற்கு விடப்படும் அல்லது தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்படும். எனவே உடைமைகளை தவற விட்டவர்கள் தாமதிக்காமல் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி உடமைகளை மீட்பது சிறந்த வழியாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.