
நாடு முழுவதும் கனமழை மற்றும் வெள்ளத்தால் வீடுகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற பேரிடர் சமயங்களில் சாமானிய மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் அவர்களுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். காலநிலை மாற்றத்தால் நடக்கும் கடுமையான மழை வெள்ள அபாயத்தில் இருந்து வீடுகளைப் பாதுகாக்க காப்பீடு ஒரு தீர்வாக இருக்கும்.
வீட்டு உரிமையாளராக இருந்தாலும் சரி, வணிக வளாகம் போன்ற பிற கட்டிட உரிமையாளராக இருந்தாலும் சரி, சரியான காப்பீடு இருந்தால், பேரிடர்களில் ஏற்படும் பாதிப்பின்போது தேவையான நிவாரணம் கிடைக்கும். இதற்காக பிரத்யேக வெள்ளக் காப்பீட்டுக் பாலிசி இல்லை என்றாலும், காப்பீட்டுத் திட்டங்களில் இதுவும் ஒரு அம்சமாக இடம்பெறுகிறது.
ஸ்டாண்டர்ட் ஃபயர் & ஸ்பெஷல் பெரில்ஸ் பாலிசி மற்றும் ஹவுஸ்ஹோல்டர்ஸ் இன்சூரன்ஸ் பாலிசி மூலம் வெள்ளக் காப்பீடு கிடைக்கிறது. இது வெள்ளம், புயல்கள், கலவரங்கள் மற்றும் பிற நிகழ்வுகளால் ஏற்படும் சேதத்தை ஈடுசெய்கிறது. இந்தப் பாலிசிகளை தனிநபர்கள் மட்டுமின்றி நிறுவனங்களும் எடுத்துக்கொள்ளலாம். மேலும், பாரத் உத்யம் சுரக்ஷா பாலிசி, பாரத் சூக்ஷ்மா உத்யம் சுரக்ஷா மற்றும் பாரத் க்ரிஹா ரக்ஷா பாலிசி போன்றவை மூலம் STFI என்ற வகைப்பாட்டின் கீழ் இயற்கைப் பேரழிவுகளில் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குகின்றன.
STFI என்றால் என்ன? STFI என்பது தீ விபத்து மற்றும் புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் இழப்புகளுக்கு ஈடுசெய்யும் அம்சமாகும். இந்தக் காப்பீடு குறிப்பாக தீ விபத்துக்கான பாதுகாப்பில் தான் கவனம் செலுத்துகிறது. STFI அம்சம் சேர்க்கப்படுவதால் பிற எதிர்பாராத பேரழிவுகளுக்கும் கவரேஜ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடைகள், அலுவலகங்கள் மற்றும் தொழில்துறை அலகுகள் போன்ற வணிகச் சொத்துக்களைப் பாதுகாக்க, விரிவான காப்பீடு அவசியம். சொத்துக்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களில் மழை, வெள்ள பாதிப்புக்கான கவரேஜையும் சேர்த்து அப்டேட் செய்யலாம். இது வெள்ளம் தொடர்பான சேதங்கள் மற்றும் நீர் தேங்கலுக்கு எதிராகப் பாதுகாப்பை வழங்கும்.
வீட்டு உரிமையாளர்கள் பாரத் க்ரிஹா ரக்ஷா பாலிசியை எடுக்கலாம். இது 10 ஆண்டுகள் வரை கவரேஜ் வழங்கும் வீட்டுக் காப்பீட்டுத் திட்டம். இது கட்டிடம் மற்றும் அதில் உள்ள பொருட்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். அரசுத் திட்டங்களின் கீழ் கிடைக்கும் மலிவு விலை வீடுகளுக்கு உபகரணங்களுக்கான காப்பீடு தானாகவே கிடைக்கும்.
இந்த வீட்டு பாதுகாப்பு பாலிசிகள் வெள்ளம், புயல், சூறாவளி உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கின்றன. கட்டமைப்புச் சேதம் மற்றும் தண்ணீர் சேதத்தில் இருந்து தொடங்கி மீண்டும் பெயின்ட் அடிப்பது போன்ற பல அம்சங்கள் இதில் அடங்கியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
வெள்ளப் பாதுகாப்புடன் கூடிய பல்வேறு காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. ஸ்டாண்டர்ட் ஃபயர் & ஸ்பெஷல் பெரில்ஸ் பாலிசியில் வணிகக் கட்டிடங்கள், உபகரணங்கள் மற்றும் இருப்பு வைத்துள்ள பொருள்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். ஷாப்கீப்பர்ஸ் இன்சூரன்ஸ் பாலிசி சிறு வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்தப் பாசிலியில் வெள்ளக் காப்பீட்டு ஆட்-ஆன் மூலம் சொத்து மற்றும் பங்குகளை உள்ளடக்கியது.
ஆபிஸ் பேக்கேஜ் பாலிசி அலுவலக வளாகங்கள் மற்றும் உபகரணங்களுக்கு வெள்ளப் பாதுகாப்பு கவரேஜ் வழங்குகிறது. இன்டஸ்ட்ரியல் ஆல்-ரிஸ்க் பாலிசியில் தொழிற்சாலைகளுக்கு வெள்ளம் தொடர்பான சேதங்கள் உட்பட, பரந்த கவரேஜ் கிடைக்கிறது.