
கல்லூரியில் இடம் கிடைத்தாலும் அடித்தட்டு குடும்பத்தை சேர்ந்த மாணவர்களால் அதனை அடைக்க முடியாமல் சிரமப்படும் சூழல் நிலவி வருகிறது. 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி பெரும்பாலான கல்லூரிகளில் அட்மிஷன் பணி துவங்கப்பட்டுள்ளது. சிலர் கலந்தாய்வுக்காக காத்திருக்கும் நிலையில் கல்விக்கடன் பெறுவது குறித்த விவரங்களை இப்போது பார்ப்போம்
பலரும் கல்விக் கடன் வாங்குவது தொடங்கி, அதைத் திரும்பச் செலுத்துவது, கடனை நிர்வகிப்பது போன்றவை கடினமான செயல் என நினைக்கிறார்கள். அதில் உள்ள முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் கல்விக் கடனை சுலபமாகக் கையாள முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளின் கடன் விவரங்கள் மற்றும் மாறுபட்ட திருப்பிச் செலுத்தும் விதிகள் இவற்றையெல்லாம் அறிந்துகொண்டு, திட்டமிட்டுச் செயல் படுத்தினால் கல்விக் கடனில் கணிசமான பணத்தை சேமிக்கலாம்.
எல்லா மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் அரசு தரப்பிலிருந்து சில நிதி உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய மேற்படிப்புக் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். இதுபோன்ற திட்டங்களில் ஒன்றுதான் பிரதமரின் வித்யாலட்சுமி கல்விக் கடன் திட்டம். இந்தத் திட்டம் மூலம் 2031-க்குள் ரூ.3,600 கோடி மதிப்பில் பிணையம் இல்லாத கல்விக் கடன்களை வழங்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் பலன் பெற மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில், லாக்இன் செய்து பதிவு செய்தபின், விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்து, ஒவ்வொரு மாணவரின் கல்வித் தகுதி மற்றும் கடன் தேவைக்கு ஏற்ப விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு வழங்கும் வேறு எந்தத் திட்டத்தின் மூலமும் உதவித்தொகை பெறாதவர்கள் மட்டும், இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் வரை பிணை இல்லாத கடன் பெறலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் உள்ள மாணவர்கள் ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கும் கடனுக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படும். வித்யாலட்சுமி கல்விக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் உங்களுக்கான கல்விக் கடனை பெறுவதற்கு சில அடிப்படை நிதி திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். கடன் மேனேஜ்மென்ட் செயலிகளை (Loan Management Application) கடனின் கால அளவு இவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்வது கட்டாயம். கடனுக்குப் பொறுப்பு முழுக்க முழுக்க மாணவர்களாகிய நீங்கள்தான் என்பதால் படிக்கும்போது கல்லூரியில் பொறுப்புடன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
கல்லூரிப் படிப்பு முடித்ததும் பணிக்குச் செல்வதற்கான முயற்சிகளைத் தீவிரமாக எடுக்க வேண்டும். பலர் கடன் வாங்கி படித்ததையே மறந்துவிடும் சூழல் நிலவுகிறது.அடுத்தகட்ட மேற்படிப்பு படிக்க விரும்பினால் கடனுக்கான தவணையைத் திருப்பிச் செலுத்தும்போது நிதிச்சுமை ஏற்படு வதைத் தவிர்க்க முடியாது. கடனை சரியாகத் திருப்பிச் செலுத்தி அபராதம் செலுத்தும் நிலைக்கு ஆளாகாமல், உங்களுக்கும் பெற்றோருக்கும் மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
கடன் தவணையை சரியாகத் திருப்பிச் செலுத்தாதபோது உங்களின் கிரெடிட் ஸ்கோர் குறையும் வாய்ப்பு மிக அதிகம். இதனால் எதிர்காலத்தில் திருமணம், வாகனம் மற்றும் வீட்டுக் கடன் வாங்க முயற்சி செய்யும்போது பிரச்னைகளைச் சந்திக்க நேரும். வேலைக்குச் சேர்ந்த உடன் விலை உயர்ந்த பைக், மொபைல் எனச் செலவிடாமல் முதலில் கடனை அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீண்ட காலத்துக்குக் கடனைத் திருப்பி செலுத்தாமல் இருந்தால் வட்டி அதிகரிக்கும்.
வெவ்வேறு வங்கியில் இல்லாமல் ஒரே வங்கியில் மட்டும் கடன் பெற்றால், தவணைகளைத் திருப்பி செலுத்துவது எளிதாகும். வட்டி தொகையும் கணிசமாகக் குறையும். தவணை செலுத்துவது தடைபடாமல் இருக்க வங்கியில் Auto Debit வசதியைப் பயன் படுத்தி, குறிப்பிட்ட தொகையை தவணை முறையில் திருப்பிச் செலுத்தலாம்.
உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப திருப்பிச் செலுத்தும் காலத்தைத் தீர்மானிக்கலாம். 6 மாதம் அல்லது வருடத்துக்கு ஒருமுறை கடனை மறு ஆய்வு செய்து, நடைமுறையில் உள்ள புதுத் திட்டத்தில் வட்டிக் குறைவாக இருந்தால், அதற்கு மாற்றிக்கொள்வது மிக முக்கியம். தவிர்க்க முடியாத பல்வேறு காரணங்களால் கல்விக் கடனைத் திரும்பச் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி, மாற்று ஏற்பாடுகளை விசாரிக்கலாம். அவர்கள் தகுந்த வழிகாட்டுவார்கள்.
முன்கூட்டியே கடனை அடைப்பது, குறைந்த வட்டி விகிதத்தில் புதிய கடனாக மாற்றுவது இவை நிதி சுமையைக் குறைக்க உதவும். கடனின் கால அளவை நீட்டிப்பது மற்றும் மிக விரைவில் திருப்பிச் செலுத்துதல் என நம் சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்யலாம். அபராதம் மற்றும் வங்கிக் கட்டணம் இவற்றில் சலுகை அளிக்கும் அதிகாரம் வங்கி உயரதிகாரிகளுக்கு உண்டு. வங்கி அதிகாரி களிடம் முறையாக அணுகுவது அவசியம். நட்புணர்வுடன் பழகுவது பலன் தரும்.
கடனை அடைக்காமல் அலட்சியம் காட்டினால், பணியில் சேரும்போது சம்பளப் பணத்தை முடக்கும் நிலை உருவாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
படித்து முடித்தபின் எதிர்பார்த்த சம்பளம் தரும் வேலை கிடைக்கவில்லை என்றால், கடனைத் திருப்பி செலுத்துவது பெரிய சவாலாக மாறிவிடும். எனவே, அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.