வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் அந்தக் கணக்குக்கான நாமினியை தேர்வு செய்ய வேண்டி இருக்கும். மரணத்துக்குப் பிறகு, அக்கவுண்டில் இருக்கும் டெபாசிட்டுகளுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய நாமினி இருப்பது அவசியம். இது கணக்கில் உள்ள தொகை சரியான நபருக்குச் செல்வதை உறுதி செய்கிறது.
இப்போது, வங்கிக் கணக்குகளில் நாமினிகளின் எண்ணிக்கையை நான்காக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் நடைமுறைக்கு வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் அக்கவுண்ட் மற்றும் டெபாசிட்களுக்கு பொருத்தமான நாமினியைத் தேர்வு செய்ய மிகவும் உதவியாக இருக்கும். இது ஏன் முக்கியமானது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
முதலீட்டுகள் சரியாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான முதல் படி சரியான நாமினியை நியமிப்பதுதான். ஆனால், முதலீட்டுக்கு எத்தனை நாமினிகளை நியமிப்பது என்ற கேள்வி எழும். அப்போது கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, முதலீட்டிற்குத் தேவைப்படும் நாமினிகளின் எண்ணிக்கை. இரண்டாவது, நிதி நிறுவனம் அல்லது முதலீடு செய்யப்படும் பிற நிறுவனம் அனுமதிக்கும் நாமினிகளின் எண்ணிக்கை.
நடைமுறையில் உள்ள வங்கி நெறிமுறைகளின்படி, வங்கிக் கணக்குகள் மற்றும் டெபாசிட்களுக்கு ஒரு நாமினியை மட்டுமே நியமிக்க அனுமதிக்கின்றன. இதனால், ஒரு அக்கவுண்ட்டில் ஒரு நாமினியை மட்டுமே நியமிக்க முடியும். ஆனால், நாமினிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை நாமினியாக பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கலாம்.
குடும்பத் தலைவராக இருப்பவர்கள் தங்கள் காலத்துக்குப் பின், தாங்கள் செய்துள்ள முதலீடுகளின் பலன் குடும்பத்தில் உள்ள வெவ்வெறு நபர்களுக்குப் பகிரப்படுவதை விரும்பலாம். அவர் தேர்வு செய்யும் நபர்கள் அவரது வாழ்க்கைத் துணையாகவோ பிள்ளைகளாகவோ பேரக்குழந்தைகளாகவோ இருக்கலாம்.
பொதுவாக, நிறைய பேர் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். எனவே இந்த விஷயத்தில் பல நாமினிகளை நியமிக்கக்கூடிய வசதி இருப்பது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு நாமினியை மட்டும் நியமித்து அவர் தான் பெறும் தொகையை மற்றவர்களுக்கும் பிரித்து வழங்குவதைவிட, ஆரம்பத்திலேயே நிதி அதற்குரிய அனைவருக்கும் பகிரப்படுவதை உறுதிசெய்ய பல நாமினிகள் வசதி தேவை.
வெவ்வேறு நாமினிகளை நியமிக்கும்போது கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது. ஒவ்வொருவரும் எவ்வளவு தொகையைப் பெற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பும் உள்ளது. நாமினிகளின் நிலை மற்றும் தேவையின் அடிப்படையில், வெவ்வேறு விகிதங்களில் தொகையை விநியோகிக்க வேண்டிய அவசியம் இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, குடும்பத்தில் உள்ள ஒரு நபர் கஷ்டப்படுபவராக இருக்கலாம். அவரது பணத்தேவையைக் கருத்தில் கொண்டு அவருக்குக் அதிக தொகையை ஒதுக்க வேண்டியிருக்கலாம். இதுபோன்ற சூழலில் பல நாமினிகள் இருப்பது பயனுள்ளது. ஒரு குறிப்பிட்ட நபருக்கு வழங்கப்பட வேண்டிய தொகை அல்லது சதவீதம் எவ்வளவு என்று குறிப்பிடப்படலாம். இது நாமினிகளுக்கான தொகை சீராக சென்றடைய வழிவகுக்கும்.
Insurance Vs Investment
பல நாமினிகள் முறையில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் காலத்துக்குப் பிறகு, நிதியை பகிர்ந்தளிக்கும் செயல்முறை முற்றிலும் எளிமையானதாக உள்ளது. தற்போது, ஒரு நபர் மட்டுமே நாமினியாக அனுமதிக்கப்படுவதால், முழுத் தொகையும் அந்த ஒரு நபருக்குச் செல்கிறது. பின்னர் அவர்கள் கிடைக்கும் தொகையை உரியவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும். இதனால், அடிக்கடி சிக்கல்களும் சர்ச்சைகளும் உருவாகின்றன.
ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகளை நியமித்து, அவர்களுக்குச் சேரவேண்டிய தொகையை நிர்ணயம் செய்யும் வசதி இருந்தால், நிதி பகிர்வு தொடர்பான சிக்கல்களை முற்றிலும் தவிர்க்கலாம். இது நிறைய நேரத்தையும் மிச்சப்படுத்த உதவும். அதே நேரத்தில் தற்போது உள்ள வசதிகள் எதிலும் சமரசம் செய்யும் அவசியமும் இருக்காது.