கிடு கிடுவென உயரும் தங்கம்
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு ஒரு கிராம் தங்க நகை 8.86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு ஒரு கிராம் தங்க நகை 54 ரூபாய்க்கும், 1980 ஆம் ஆண்டு 100 ரூபாயை கடந்த தங்கத்தின் விலையானது, 1990 ஆம் ஆண்டு 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 2000 ஆண்டு 440க்கும், 2007 ஆம் ஆண்டு 1800 ரூபாய்க்கும், 2012 ஆம் ஆண்டு 3000 ரூபாய்க்கும், 2024 ஆம் ஆண்டு 7500 என்ற உச்சத்தை தொட்டுள்ளது. இதே போன்ற தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கத்தில் முதலீடு
தங்கத்திலும் நிலத்திலும் முதலீடு செய்ய பொதுமக்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுவார்கள், குறிப்பாக தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் தங்களது குழந்தைகளின் அத்தியாசிய தேவைகளுக்கும், படிப்பிற்கும், திருமணத்திற்கும் உதவியாக இருக்கும் என நினைப்பார்கள். நிலத்தில் முதலீடு செய்தால் உடனடியாக விற்பனை செய்ய முடியாத நிலையின் காரணமாக அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு எப்போதும் நஷ்டம் ஏற்பட்டதே இல்லை. அந்த அளவிற்கு லாபம் கொடுத்து வருகிறது. எனவே தங்கத்தின் மீதான தேவை அதிகரித்திருப்பதால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தங்கம் 60ஆயிரம் என்ற உச்சத்தை தொட்டுள்ளது.
Gold price chennai
தங்கம் விலை குறைய வாய்ப்பு இல்லை
இந்தநிலையில் வரும் நாட்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும், விலை அதிகரிக்க காரணம் என்ன என தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். தங்கத்தின் மீதான ஆர்வம் மக்களிடம் அதிகமாக உள்ளது. தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்கள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 41 சதவிகிதம் லாபம் அடைந்துள்ளனர். இதுவரை தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது இல்லை, லாபம் மட்டுமே கிடைக்கும். 50 வருடத்தில் முதலீடு லாபமாக உள்ளது. எனவே வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு இல்லை. தீபாவளி பண்டிகை நாட்களில் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
Gold price today
ஒரு சவரன் 2 லட்சத்தை தொடும்
மேலும் உச்சத்தை நோக்கி தான் தங்கம் விலை செல்லும், அடுத்த 10 வருடத்தில் நினைத்து பார்க்க முடியாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். 2030ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் 1 லட்சம் ரூபாயை தாண்டி விடும். அடுத்த 10 வருடத்தில் ஒரு கிராம் 25ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு சவரன் 2 லட்சம் ரூபாய் வரை விற்பனையாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
தங்கம் விலை உயர காரணம் என்ன.?
மேலும் தங்கம் விலை உயர்விற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக ஜியோ அரசியல், அமெரிக்கா தேர்தல், மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது. ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை, ரஷ்யா உக்ரைன் போர் போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர காரணம் என தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க மதிப்பில் இந்திய ரூபாய் மதிப்பு சரிவும் ஒரு காரணம் என கூறினார்.
மேலும் சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதுவும் தங்கம் விலை கடுமையாக உயர காரணம் என தெரிவித்தார், இதே போல வெள்ளியின் விலையும் யாரும் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் அதிகரிக்கும் என ஜெயந்தி லால் சலானி தெரிவித்துள்ளார்.