ஒருவர் வேலையில் இருந்து தனது 60 வயதில் ஓய்வு பெறும்போது, அதன்பிறகு அவருக்கு நிதி ஆதாரமாக இருப்பது ஓய்வூதியமாகும். பெரும்பாலானோருக்கு இந்த ஓய்வூதிய தொகை குறைவாக இருப்பதாலும், 60 வயதுக்கு மேல் வேறு வருமானம் கிடைக்காததாலும் அன்றாட செலவுக்கு அல்லாடுகின்றனர். இனி ஓய்வுக்கு பிறகு மூத்த குடிமக்கள் வருமானத்துக்கு அல்லல் பட வேண்டிய நிலை இருக்காது. ஏனெனில் இவர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana - PMSYM) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
24
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம்
பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பாதுகாப்பு வழங்கும் ஒரு மத்திய அரசுத் திட்டமாகும். 60 வயதுக்குப் பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் நிலையான வருமானத்தை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தெருவோர வியாபாரிகள், ரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டடத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், பீடி தொழிலாளர்கள் மற்றும் பிற அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் இணையலாம்.
34
ரூ.55 செலுத்தினால் ரூ.3,000 கிடைக்கும்
இந்தத் திட்டத்தில் சேருவதற்கு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தகுதியுடையவர்கள். 18 வயதில் மாதம் ரூ.55, 29 வயதில் மாதம் ரூ.100, 40 வயதில் மாதம் ரூ.200 என செலுத்த வேண்டும். பயனாளிகள் செலுத்தும் அதே தொகையை மத்திய அரசும் செலுத்தும். இது 50:50 பங்களிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் தகுதி பெற மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO), தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), அல்லது அரசு ஊழியர் காப்பீட்டுக் கழகம் (ESIC) போன்ற பிற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் உறுப்பினராக இருக்கக் கூடாது.
இந்த திட்டத்தில் சேர பொது சேவை மையத்திற்கு (Common Service Centre - CSC) சென்று உங்கள் ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு பாஸ்புக்கை எடுத்துச் சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வாயிலாக https://maandhan.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் மொபைல் எண் ஆகியவை அவசியமாகும்.
மத்திய அரசு திட்டத்தின் பயன்கள்
இந்த திட்டத்தின் பயனாக 60 வயதுக்குப் பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். திட்டத்தில் சேர்ந்தவர் இறந்தால், அவரது வாழ்க்கைத் துணைக்கு ஓய்வூதியத் தொகையில் 50% (ரூ.1,500) குடும்ப ஓய்வூதியமாக கிடைக்கும். பயனாளிகள் செலுத்தும் அதே தொகையை மத்திய அரசு செலுத்துவதால் இந்த திட்டத்தின் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக பலன் பெறலாம்.