Published : Aug 12, 2025, 08:00 PM ISTUpdated : Aug 12, 2025, 08:12 PM IST
திருப்பதி செல்லும் வாகனங்கள் கட்டாயம் ஃபாஸ்டேக் எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலிபிரி செக்போஸ்டில் ஈஸியாக 'ஃபாஸ்டேக்' பெறுவது எப்படி? என பார்ப்போம்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் 2 அல்லது 3 நாள் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருமலை மலை அடிவாரத்தில் அலிபிரி சோதனைச் சாவடி அமைந்துள்ளது.
25
திருப்பதி செல்ல ஃபாஸ்டேக் கட்டாயம்
இங்கு இருந்து தான் திருப்பதி-திருமலை மலைப்பாதை தொடங்குகிறது. ஆந்திரா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரும் வாகனங்கள் அலிபிரி சோதனைச் சாவடியை கடந்து தான் திருமலைக்கு செல்ல முடியும். இந்நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் திருமலைக்குச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் (FASTag) கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) அதிரடியாக அறிவித்துள்ளது.
35
அலிபிரி சோதனைச் சாவடி
ஆகஸ்ட் 15 முதல் ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் திருமலைக்குள் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலிபிரி சோதனைச் சாவடியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைத்து பக்தர்களின் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் ஃபாஸ்டேக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் இல்லாத பக்தர்களின் வசதிக்காக, அலிபிரி சோதனைச் சாவடியிலேயே அதைப் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அலிபிரி சோதனைச் சாவடியில் ஃபாஸ்டேக் பெறுவது எப்படி?
அதாவது அலிபிரி சோதனைச் சாவடியிலேயே ICICI வங்கியுடன் இணைந்து ஒரு ஃபாஸ்டேக் வழங்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். ஃபாஸ்டேக் அட்டைக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
55
ஃபாஸ்டேக் பெற என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பிறகு உடனடியாக உங்களுக்கு ஃபாஸ்டேக் அட்டை வழங்கப்படும். அதை வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டி, ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் ஃபாஸ்டேக் பெறுவதற்கு வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை அல்லது பான் கார்டு ஆகியவற்றை ஆவணங்களாக சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.