வங்கியின் முக்கிய வருமானமே வாடிக்கையாளர்கள் லோன் காலம் முழுவதும் செலுத்தும் வட்டித் தொகையில்தான் தங்கியுள்ளது. கடன் காலம் முடிவதற்குள் முன்கூட்டியே தொகையைச் செலுத்தும்போது, வங்கிக்கு கிடைக்க வேண்டிய வட்டி வருமானத்தில் இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பைச் சரிசெய்யவே சில குறிப்பிட்ட வகை கடன்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணங்கள் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும் என்பதோடு, வாடிக்கையாளர் கையெழுத்திட்ட லோன் ஒப்பந்த ஆவணத்தின் விதிமுறைகளைப் பொறுத்தே அமையும். எனவே, எந்தவொரு கடனுக்கும் விண்ணப்பிக்கும் முன் அதன் சிறு எழுத்துக்களில் உள்ள நிபந்தனைகளை முழுமையாகப் படிப்பது நல்லது.
முன்கூட்டியே லோனை அடைப்பது லாபமா?
உங்கள் வங்கி ப்ரீபேமென்ட் கட்டணம் எதையும் வசூலிக்கவில்லை என்றால், முன்கூட்டியே லோனை முடிப்பது மிகப்பெரிய சேமிப்பாகும். மாறாக, அபராதம் விதிக்கப்பட்டால் கீழ்க்கண்ட எளிய முறையில் லாபத்தை மதிப்பிடலாம்:
வட்டி சேமிப்பு கணக்கீடு: லோனின் மீதமுள்ள காலப்பகுதிக்கு நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த வட்டித் தொகையைக் கணக்கிடுங்கள்.
கட்டணங்களை கழித்தல்: இந்த வட்டிச் சேமிப்பில் இருந்து வங்கி வசூலிக்கும் ப்ரீபேமென்ட் அபராதம் மற்றும் பிற செயலாக்கக் கட்டங்களைக் கழிக்கவும்.
நிகர லாபம்: கழித்த பிறகும் உங்களுக்குப் பண மிச்சம் இருந்தால் மட்டுமே முன்கூட்டியே செலுத்துவது லாபகரமாக இருக்கும். இல்லையெனில், அந்தத் தொகையை வேறு லாபகரமான முதலீடுகளில் ஈடுபடுத்துவது சிறந்தது.