கிரெடிட் கார்டு பில் தொகையை EMI-யாக மாற்றுகிறீர்களா? வட்டி, ஜிஎஸ்டி, மற்றும் மறைமுகக் கட்டணங்கள் உள்ளிட்ட 6 முக்கியச் செலவுகள்? உண்மைகள் என்னென்ன? விரிவாகப் பார்ப்போம்.
கிரெடிட் கார்டு பில் தொகையை EMI-யாக மாற்றுகிறீர்களா?
மாதக் கடைசியில கிரெடிட் கார்டு பில்லைப் பார்க்கும்போது தலை சுத்துதா? உடனே நம்ம கண்ணுல படுற ஒரே ஆப்ஷன். ‘Convert to EMI’. அப்பாடா, மாசம் மாசம் கொஞ்சமா கட்டிட்டாப் போச்சு-னு பெருமூச்சு விடுவோம். ஆனால், பேங்க் ஆப்-ல காட்டுற அந்த சின்ன மாதாந்திரத் தவணைத் தொகைக்கு (Monthly EMI) பின்னாடி ஒரு பெரிய கணக்கே ஒளிஞ்சிருக்கு.
குறைந்த தவணைத் தொகை என்பது குறைவான செலவு என்று அர்த்தமாகிவிடாது என்று எச்சரிக்கிறார்கள் நிதி நிபுணர்கள். ஒரு கிரெடிட் கார்டு பில்லை EMI-யாக மாற்றுவதற்கு முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய உண்மைகள் என்னென்ன? விரிவாகப் பார்ப்போம்.
26
நிலுவையில் விடுவதா அல்லது EMI-யா? எது சிறந்தது?
உங்க கிரெடிட் கார்டுல ரூ.1 லட்சம் பில் வந்து நிக்குதுன்னு வைப்போம். உங்க முன்னாடி இருக்கும் முதல் சாய்ஸ் அத்தியாவசியச் செலவுகளையோ, அவசர சேமிப்பையோ பாதிக்காமல் அந்த முழுத் தொகையையும் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டிவிட முடியுமா என்று பார்ப்பதுதான். அப்படி முழுசா கட்டிட்டா ஒரு பைசா கூட வட்டியோ கட்டணமோ இல்லை.
ஆனால் கட்ட முடியாமல் போனால், அதை அப்படியே நிலுவையில் (Revolving credit) விட்டு வைப்பது பயங்கர ஆபத்து. மாதத்திற்கு 3.75% வரை நிதிச் சுமை (Finance charge) போடப்படும். அதாவது, முதல் மாதமே வட்டியாக மட்டுமே சுமார் ரூ.3,750 எகிறும். குறைந்துவரும் அசல் முறையில் (Reducing balance) மாதத்திற்கு 1.75% வட்டியில் 9 மாத தவணையாக மாற்றினால், மாதாந்திரத் தவணை சுமார் ரூ.12,106 ஆக வரும். மொத்தமாகத் திருப்பிச் செலுத்தும் தொகை சுமார் ரூ.1.09 லட்சமாக இருக்கும். (இதனுடன் பரிசீலனைக் கட்டணம், வரிகள் தனி).
36
மாத வட்டி குறைவுதானே? - இங்கேதான் சறுக்குது; எச்சரிக்கும் நிபுணர்கள்
மாதத்திற்கு 1.75% தானே வட்டி என்று மேலோட்டமாகப் பார்த்து ஏமாந்துவிடக் கூடாது என்கிறார் 'ஏர்பே மணி' (airpay money) தலைமை நிர்வாக அதிகாரி குமார் பினித். அவர் தரும் முக்கிய அறிவுரை; காட்டப்படும் வட்டி 'குறைந்துவரும் அசல் முறையில்' (Reducing balance) கணக்கிடப்படுகிறதா என்பதைப் பாருங்கள். அசல், மொத்த வட்டி, பரிசீலனைக் கட்டணம், ஜிஎஸ்டி, இதர கட்டணங்கள் என எல்லாவற்றையும் கூட்டி மொத்தமாக எவ்வளவு செலவாகிறது என்று கணக்கிடுங்கள். தவணைக் காலத்தை நீட்டித்தால் மாதத் தவணை சின்னதாகத் தெரியும், ஆனால் முடிவில் நாம் கட்டும் மொத்தத் தொகை கிடுகிடுவென உயர்ந்துவிடும் என்கிறார்.
EMI-க்கு ஓகே சொல்வதற்கு முன் செக் பண்ண வேண்டிய 6 விஷயங்கள்!
வட்டி விகிதம் (Interest rate): பிளாட் ரேட்டா அல்லது குறைந்துவரும் அசல் முறையா?
பரிசீலனைக் கட்டணம் (Processing fee): பில்லை மாற்றும்போது ஒரு முறை வசூலிக்கும் கட்டணம்.
18% ஜி.எஸ்.டி (GST): வட்டிக்கும் பரிசீலனைக் கட்டணத்திற்கும் தனி ஜி.எஸ்.டி உண்டு.
கால அளவு (Tenure): எவ்வளவு நீண்ட காலமோ, அவ்வளவு அதிக வட்டி.
முன்முடிவுக் கட்டணம் (Pre-closure / Foreclosure charges): கையில் பணம் வந்து முன்கூட்டியே கடனை முடிக்க நினைத்தால் அதற்கும் அபராதம் போடுவார்களா?
மொத்தச் செலுத்தும் தொகை: அசலையும் தாண்டி கைவிட்டுப் போகும் மொத்தப் பணம் எவ்வளவு?
கூடுதல் எச்சரிக்கை: நீங்க பில்லை EMI-யாக மாற்றியதும், அந்தத் தொகைக்கு இணையாக உங்க கார்டின் தற்போதைய செலவு வரம்பு (Credit limit) முடக்கப்பட்டுவிடும்.
56
பணத்தை மிச்சப்படுத்த ஒரு 'சூப்பர்' டெக்னிக்: பகுதித் தொகை செலுத்துதல்!
முழு பில்லையும் அப்படியே EMI-யாக மாற்றுவதற்குப் பதிலாக, கையில் இருக்கும் தொகையை முதலில் கட்டிவிட்டு மீதியை மட்டும் தவணையாக மாற்றினால் ஆயிரக்கணக்கில் மிச்சப்படுத்தலாம். ரூ.1 லட்சம் பில்லை ஆண்டுக்கு 16% வட்டியில், 1.5% பரிசீலனைக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி-யுடன் 12 மாத EMI-யாக மாற்றினால் மொத்தக் கூடுதல் செலவு சுமார் ரூ.12,245 ஆகும்.
ஆனால், முதலில் ரூ.40,000-ஐ கட்டிவிட்டு, மீதமுள்ள ரூ.60,000-ஐ மட்டும் EMI-யாக மாற்றினால் செலவு சுமார் ரூ.7,347 ஆகக் குறைந்துவிடும். இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ.4,900 ரூபாய் உங்கள் பாக்கெட்டிலேயே தங்கிவிடும்.
66
தேவைக்கு வாங்குங்கள்... பழக்கமாக்காதீர்கள்!
வெல்தீரியா' (Wealtheria) நிறுவனரும் சான்றளிக்கப்பட்ட நிதித் திட்டமிடுபவருமான (CFP) அங்கிதா படேல் சொல்லும் தங்கமான விதி இதுதான். திடீரென வரும் ஒருமுறை செலவுகளுக்கு, அடுத்த 6 முதல் 12 மாதங்களில் திருப்பிச் செலுத்தப் போதிய வருமானம் இருந்தால் மட்டுமே கிரெடிட் கார்டு EMI-யைப் பயன்படுத்தலாம். அதை விட்டுவிட்டு, கார்டில் செலவு செய்து கொண்டே ஒவ்வொரு பில்லையும் EMI-யாக மாற்றிக்கொண்டே போனால் அது கடன் வலையை இன்னும் பெரிதாக்குமே தவிர குறைக்காது. குறிப்பிட்ட தேவையின் நோக்கத்திற்காக மட்டுமே கடன் வாங்குங்கள், கடனை ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளாதீர்கள்!"
பெரிய தொகை என்றால், கார்டு EMI-யைத் தேர்ந்தெடுக்கும் முன் ஒரு நல்ல தனிநபர் கடனுடன் (Personal Loan) ஒப்பிட்டுப் பாருங்கள். வெறுமனே பிளாட் ரேட் வட்டியைப் பார்க்காமல், உண்மையான வருடாந்திர கடன் செலவு, பரிசீலனைக் கட்டணங்கள், முன்முடிவுக் கட்டணங்கள் அனைத்தையும் கணக்கிடுங்கள். மாதத் தவணை குறைவாகத் தெரிவதை மட்டும் பார்க்காமல், ஒட்டுமொத்தமாக உங்களிடம் இருந்து எவ்வளவு பணம் வெளியேறுகிறது என்பதைப் பார்த்து புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.