Best Bank for Gold Loan India : தங்கம் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் தங்கத்தை அடகு வைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த பதிவில் எந்த வங்கி குறைந்த வட்டி விகிதத்தில் தங்க நகைக் கடன் வழங்குகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கத்தை மக்கள் பாதுகாப்பான சேமிப்பாகவும், முதலீடாகவும் கருதுகின்றனர். அவசர தேவைக்கு அடமானம் வைத்து கடன் பெறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்க நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது போல அதை அடகு வைப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஆனால் எந்த வங்கியில் தங்க நகையை அடகு வைத்தால் குறைவான வட்டி விதிக்கப்படும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
27
தங்க நகைக் கடன்
தங்க நகை கடன் என்பது ஒருவரது தங்க ஆபரணங்கள் அல்லது நாணயங்களை வங்கியில் பிணையாக கொடுத்து வணிகத் தேவைகள் அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக பணத்தை பெறும் முறையாகும். இது சில மணி நேரங்களில் கடன் பெற்றுக் கொள்ளும் வசதியை அளிக்கிறது. நகைக் கடனுக்கு குறிப்பிட்ட சதவீதம் வட்டியை வங்கிகள் விதிக்கின்றன. தங்கத்தின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வட்டியாக வசூலிக்கப்படுகிறது. நகைக் கடன் வாங்குபவர்கள் இந்த வட்டியை மாதாந்திர தவணை அல்லது கடன் கால முடிவில் அசன் தொகையுடன் சேர்த்து மொத்தமாக செலுத்தும் வசதி உள்ளது.
37
நகைக் கடனுக்கான வட்டி விகிதங்கள்
சிலர் வட்டி விகிதங்களை பற்றி அறிந்து கொள்ளாமல் பணத் தேவைகளுக்காக தங்க நகை கடன் பெறுகின்றனர். ஆனால் நகையை திருப்பும் பொழுது வட்டியைப் பார்த்து சிலருக்கு தலை சுற்றலே வந்துவிடுகிறது. பெரும்பாலான வங்கிகள் நகைக் கடனுக்கு 8 முதல் 12% வட்டி வசூலிக்கின்றன. தனியார் நிறுவனங்கள், அரசு வங்கிகளைக் காட்டிலும் அதிகமாக வட்டி வசூலிக்கின்றன. தங்க நகை கடன் பெற விரும்புபவர்கள் வங்கிகளின் வட்டி விகிதத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
குறைந்த வட்டி விகிதங்கள் வழங்கும் வங்கிகளின் அடிப்படையில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதலிடம் பெறுகிறது. இந்த வங்கி தங்க நகைக் கடன்களுக்கு 8.50% என்கிற மிகக் குறைந்த வட்டி விகிதத்துடன் முன்னிலையில் உள்ளது. அதை தொடர்ந்து ஆக்ஸிஸ் வங்கி 8.90% வட்டி விகிதத்துடனும், பேங்க் ஆஃப் பரோடா 9.15% வட்டி விகிதத்துடனும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நகைக் கடன்களை வழங்குகின்றன. தனியார் துறையில் ஐசிஐசிஐ வங்கி 9.25% வட்டி விகிதத்தில் தங்க நகைக் கடன்களை வழங்குகிறது. தனியார் நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் 9.50% வட்டி விதிக்கிறது.
57
SBI வங்கி நகைக் கடன்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தங்க நகைக் கடன்களுக்கு அதிகபட்ச வரம்பாக ரூ.50 லட்சம் நிர்ணயித்துள்ளது. மேலும் வட்டி விகிதம் 9.95% முதல் தொடங்குகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கி குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் நகைக் கடன்களை வழங்குகிறது. ஆனால் இந்த வங்கி நகை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 11.99% முதல் தொடங்குகிறது. இந்தியன் வங்கி தமிழகத்தில் அதிக கிளைகளை கொண்ட வங்கியாக விளங்கி வருகிறது. இதனால் இந்தியன் வங்கியில் கடன் பெறுவது மிகவும் எளிதாகும். இங்கு 8.5% முதல் 9.75% வரை வட்டி விதிக்கப்படுகிறது.
67
விவசாயிகளுக்கு சிறப்பு சலுகைகள்
கனரா வங்கி குறைந்த செயலாக்க கட்டணம் வசூலிக்கும் வங்கியாக செயல்படுகிறது. இங்கு 7.65% முதல் 9.25% வரை நகை கடன்களுக்கு வட்டி விதிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு விவசாயியாக இருந்து ஆதாரங்களை சமர்ப்பித்தால் பெரும்பாலான வங்கிகளில் 7% முதல் 8% என்ற மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற முடியும். சில நேரங்களில் அரசு வட்டி மானியம் வழங்கினால் இது இன்னும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
உங்கள் நகையின் மதிப்பில் 70% முதல் 75% வரை மட்டுமே கடனாக பெற முடியும். ரிசர்வ் வங்கி விதிகளைப் பொறுத்து இது வங்கிக்கு வங்கி மாறும். வட்டியையும் அசலையும் கடன் கால முடிவில் ஒரே தவணையாக செலுத்தலாம் அல்லது ஒவ்வொரு மாதமும் வட்டியையும் ஒரு பகுதியை அசலையும் செலுத்தும் வாய்ப்புகளும் உண்டு. கடனை அனுமதிக்கும் போது வங்கி செயலாக்கக் கட்டணத்தை வசூல் செய்து கொள்ளும். நகையின் தரத்தை ஆய்வு செய்யும் நபருக்கான கட்டணத்தை நீங்கள் தனியாக செலுத்த வேண்டியது இருக்கும்.
77
பொதுத்துறை வங்கிகளே சிறந்தது
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அல்லது இந்தியன் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளே நகைக் கடன்கள் வாங்குவதற்கு சிறந்த வங்கிகளாகும். இங்கு வட்டி விகிதம் வெளிப்படையானது மற்றும் மறைமுக கட்டணங்கள் மிகவும் குறைவு. கிராமப்புறங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுவது எளிதானது. வட்டி சற்று அதிகமாக இருந்தாலும் தனியார் நிதி நிறுவனங்கள் 10 நிமிடங்களில் கடன் வழங்கும். ஆனால் இவை நீண்ட காலத்திற்கு லாபகரமானது அல்ல.
நகைக் கடன் வாங்குவதற்கு முன்னர் உங்கள் அருகில் உள்ள குறைந்தபட்சம் இரண்டு வங்கிகளாவது இன்றைய வட்டி விகிதம் மற்றும் கிராம் ஒன்றுக்கு எவ்வளவு கடன் வழங்குகிறார்கள் என்பதை ஒப்பிட்டு பார்த்து பின்னர் முடிவெடுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.