EV Charging Stations: நீங்கள் எலெக்ட்ரிக் கார் வைத்துள்ளீர்களா? எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் குறித்து மத்திய அரசு குட்நியூஸ் சொல்லியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் தற்போது 52,718 பொது எலக்ட்ரிக் வாகன (EV) சார்ஜிங் ஸ்டேஷன்கள் பயன்பாட்டில் இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் 16,561 ஸ்டேஷன்கள், கார்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜர்கள் வசதி கொண்டவை என்றும் செவ்வாய்க்கிழமை அரசு கூறியுள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, கனரக தொழில்துறை இணையமைச்சர் பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா பதிலளித்தார். அப்போது, "தனியார் EV உரிமையாளர்கள் மத்தியில் இருக்கும் 'ரேஞ்ச் பயத்தை' (சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற கவலை) குறைக்க, நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
25
ரூ.2,000 கோடி ஒதுக்கீடு
மத்திய அரசின் பதிலின்படி, கனரக தொழில்துறை அமைச்சகம் FAME-II திட்டத்தின் கீழ் ரூ.912.50 கோடியையும், PM E-DRIVE திட்டத்தின் கீழ் ரூ.2,000 கோடியையும் ஒதுக்கியுள்ளது. இந்த நிதி, நாடு முழுவதும் குறிப்பாக நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பொது EV சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும்.
மேலும், மின்சார அமைச்சகம் 'எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு நிறுவுதல் மற்றும் இயக்குவதற்கான வழிகாட்டுதல்கள் 2024'-ஐ வெளியிட்டுள்ளதாகவும் அரசு கூறியது. இந்த வழிகாட்டுதல்கள், பேட்டரி மாற்றுதல் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் உட்பட, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஒரு சார்ஜிங் நெட்வொர்க்கிற்கான தரங்களை வழங்குகின்றன.
35
இனி எளிதாக EV சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கலாம்
கூடுதலாக, EV சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது உரிமம் தேவைப்படாத ஒரு நடவடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், தனியார் தொழில்முனைவோர் எளிதாக சார்ஜிங் உள்கட்டமைப்பை நிறுவ முடியும். PM E-DRIVE திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் கார்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அரசு, எலக்ட்ரிக் கார்கள் 'ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI)' திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்படுவதாகத் தெரிவித்தது.
PLI ஆட்டோ திட்டத்தின் கீழ், தகுதியான அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கு (OEMs), எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் உட்பட, மேம்பட்ட ஆட்டோமோட்டிவ் டெக்னாலஜி (AAT) வாகனங்களின் கூடுதல் விற்பனையில் 13% முதல் 18% வரை நிதி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
நாட்டில் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க எடுக்கப்படும் மற்ற நடவடிக்கைகள் குறித்தும் அரசு விளக்கியது. ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 31, 2024 வரை செயல்படுத்தப்பட்ட FAME இந்தியா திட்டம் இரண்டாம் கட்டத்திற்கு (Phase-II) ரூ.11,500 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டம் மூலம் சுமார் 16.72 லட்சம் எலக்ட்ரிக் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனைக்கு ஆதரவளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டம் ஜூன் 30, 2026 நிலவரப்படி 5,197 எலக்ட்ரிக் பேருந்துகளை பயன்பாட்டிற்குக் கொண்டுவர உதவியுள்ளது. அதே நேரத்தில், நாடு முழுவதும் பொது EV சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க ரூ.912.50 கோடி ஒதுக்கப்பட்டது.
55
PM E-DRIVE திட்டம்
செப்டம்பர் 29, 2024 அன்று அறிவிக்கப்பட்ட PM E-DRIVE திட்டம் குறித்து அரசு மேலும் கூறுகையில், இத்திட்டத்திற்கு ரூ.10,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 28.30 லட்சம் எலக்ட்ரிக் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள், டிரக்குகள், பேருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ்களுக்கு ஆதரவளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில், நாடு முழுவதும் பொது EV சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சோதனை நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் ஆதரவளிக்கிறது.