
ஜோதிடத்தில் எந்த ஒரு ராசிக்காரர்களும் வெள்ளி அணியக்கூடாது என்கிற விதிகள் கிடையாது. இருப்பினும் ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாகவோ, நீச்சமாகவோ அல்லது குறிப்பிட்ட தோஷங்களுடன் இருந்தாலோ வெள்ளி அணிவது சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். வெள்ளி என்பது சந்திர கிரகத்துடன் தொடர்புடைய ஒரு உலோகமாகும். சந்திரன் மனம், அமைதி, செழிப்பு ஆகியவற்றை குறிக்கிறது. வெள்ளி மிகவும் சுபமான உலோகமான கருதப்படுகிறது. மனம் மற்றும் உடலுக்கு அமைதியையும், குளிர்ச்சியும் தருகிறது. எனினும் சில ராசிக்காரர்களுக்கு இது நல்லதல்ல என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
சில ராசிக்காரர்கள் வெள்ளி அணிவதை தவிர்க்கலாம் என கூறப்படுகிறது. அதில் முதலாவது மேஷ ராசிக்காரர்கள். மேஷ ராசியின் அதிபதி செவ்வாயாகும் செவ்வாயும், சந்திரனும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட கிரகங்கள். சில சமயங்களில் மேஷ ராசிக்காரர்கள் வெள்ளி நகைகள் அணிவது அவர்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தலாம் அல்லது உணர்ச்சி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தலாம். வெள்ளி நகைகளை மேஷ ராசிக்காரர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. ஆனால் கவனத்துடன் அணிய வேண்டும். அதேபோல் சிம்மராசிக்காரர்களின் அதிபதி சூரியன். சூரியனும் சந்திரனும் இயற்கையில் எதிரெதிர் கிரகங்கள். சிம்ம ராசிக்காரர்கள் வெள்ளி அணிவது மன குழப்பங்கள் அல்லது முடிவெடுப்பதில் சிக்கல்களை உருவாக்கலாம்.
தனுசு ராசி அதிபதி வியாழன் (குரு). வியாழன் ஒரு சுப கிரகம். இந்த ராசிக்காரர்கள் வெள்ளி அணிவது சில நேரங்களில் அவர்களுக்கு பண இழப்பு அல்லது அதிருப்தியை ஏற்படுத்தலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இது பொதுவான விதி அல்ல. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்தது. அதேபோல் மகர ராசிக்காரர்களின் அதிபதி சனி ஆவார். சனியும், சந்திரனும் பகை கிரகங்கள். எனவே மகர ராசிக்காரர்கள் வெள்ளி அணிவது சில எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தலாம் அல்லது அவர்கள் விரும்பிய பலன்களை தராமல் போகலாம். எனவே மேற்குறிப்பிட்ட ராசிக்காரர்கள் ஜோதிடர்களை அணுகி உங்களின் ஜாதக பலன்களைப் பொறுத்து நகைகளை அணிய வேண்டியது அவசியம்.
ஜோதிடத்தின் படி எந்த ஒரு கிரகமும் அல்லது உலோகமும் ஒருவருக்கு நன்மை செய்யுமா? அல்லது தீமை செய்யுமா? என்பது அவரவர்களின் தனிப்பட்ட பிறப்பு ஜாதகத்தை பொறுத்தது. ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் எந்த நிலையில், எந்த ராசியில், எந்த கிரகங்களுடன் இணைந்துள்ளார் என்பதை பொறுத்து வெள்ளி நகைகளை அணியலாமா அல்லது தவிர்க்கலாமா என்பதை முடிவு செய்யலாம். பொதுவாக வெள்ளி நேர்மறை ஆற்றலை ஈர்த்து, மன அமைதி, நல்லிணக்கம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது. பெரும்பாலான ராசிக்காரர்களுக்கு வெள்ளி அணிவது நல்லது என்றே கூறப்படுகிறது. வெள்ளி நகைகள் அணிவது குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஜோதிடரை அணுகி உங்களுடைய ஜாதகத்தை ஆராய்ந்து சரியான ஆலோசனையை பெறுங்கள்.
குறிப்பு: ஒருவரின் ஜாதக நிலையை பொறுத்தே எந்த நகைகளை அணிய வேண்டும்? வெள்ளி அணிவது உகந்ததா? இல்லையா? என்பது துல்லியமாக கூற முடியும். பொதுவாக எந்த ராசிக்காரர்களும் வெள்ளி அணியக்கூடாது என்று உறுதியாக கூற முடியாது. மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்துமே இணையத்தில் கிடைக்கும் பொதுவான மற்றும் ஜோதிட நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பெறப்பட்டது மட்டுமே. இதற்கு ஏசியாநெட் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. இந்த தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே பகிரப்பட்டவை. எந்த ஒரு தவறான தகவல்கள் அல்லது மூடநம்பிக்கையையும் ஊக்குவிப்பதற்காக அல்ல.