Which Zodiac Signs have Sibling Rivalry Astrology: ஜோதிடத்தில் சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு, அவர்களின் உடன்பிறந்தவர்களே எதிரிகளாக இருப்பார்களாம். அந்த ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவருடைய ஜாதகத்தில் மூன்றாம் வீடு மற்றும் பதினோராம் வீடு ஆகிய இடங்கள் உடன் பிறந்தவர்களை பற்றி கூறும் இடங்களாகும். மூன்றாம் வீடு இளைய சகோதரம் மற்றும் 11ஆம் வீடு மூத்த சகோதரமை குறிக்கும். கால புருஷ தத்துவத்தின்படியும், லக்ன அமைப்புகளின் படியும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் அல்லது பகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மற்றவர்களை விட அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அந்த ராசிகள் யார்? அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசிக்கு அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். செவ்வாய் என்றாலே வீரம், தைரியம், சண்டை ஆக்ரோஷம் தான். இவர்களுக்கு இளைய சகோதரரை குறிக்கும் மூன்றாம் வீட்டிற்கு புதன் பகவான் அதிபதியாக விளங்கி வருகிறார். செவ்வாயும் புதனும் ஜோதிடத்தில் பரம எதிரிகள் ஆவர். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு பெரும்பாலும் இளைய சகோதர சகோதரிகளுடன் தீராத பகை அல்லது சொத்த தொடர்பான தகராறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்கள் தங்களின் உடன் பிறந்தவர்களுடன் பாசமாக இருக்க முயற்சித்தாலும் இறுதியில் அது சண்டையில் முடியவே அதிக வாய்ப்பு உண்டு.
மிதுன ராசிக்கு அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகிறார். மிதுன ராசிக்கு இளைய சகோதர ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியாக சூரிய பகவான் இருக்கிறார். மிதுன ராசிக்காரர்களின் உடன் பிறந்தவர்கள் அதிக ஈகோ குணமிக்கவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. நான் பெரியவனா? நீ பெரியவனா? என்கிற அதிகாரப் போட்டி இவர்களுக்குள் எப்போதும் புகைந்து கொண்டே இருக்கும். மேலும் மிதுன ராசிக்காரர்கள் தங்களது உடன் பிறந்த பிறந்தவர்களிடம் காட்டும் அதீத பாசமே இவர்களுக்குள் அடிக்கடி சண்டையை வரவழைத்து விடும்.
விருச்சிக ராசியின் மூன்றாம் வீட்டிற்கு அதிபதியாக சனி பகவான் விளங்கி வருகிறார். விருச்சிக ராசிக்கு அதிபதியாக செவ்வாய் பகவான் இருக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய் மற்றும் சனி ஆகிய இருவரும் எதிரெதிர் துருவங்களாக உள்ளனர். எனவே இந்த கிரகங்களின் லக்னாதிபதிகளின் நிலை காரணமாக இவர்களது உடன் பிறந்தவர்கள் இவர்களது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறலாம். மேலும் சொத்து சம்பந்தமான விஷயங்களில் தங்களது உடன் பிறந்தவர்களுடன் பகை அதிகரிக்கும். இவர்களது உடன் பிறந்தவர்களே இவர்களிடமிருந்து சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்யலாம்.
கும்ப ராசிக்கு மூன்றாம் வீட்டின் அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். மேலும் கும்ப ராசியின் அதிபதியாக சனி பகவான் இருக்கிறார். விருச்சிக ராசியைப் போலவே சனி மற்றும் செவ்வாய் கிரகங்களின் பகை இங்கும் வேலை செய்கிறது. கும்ப ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்தவர்களால் ஏமாற்றங்கள் அல்லது அவர்கள் மூலமாக நீதிமன்ற வழக்குகள் வர அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் கும்ப ராசிக்காரர்கள் கொள்கையில் உறுதியாக இருப்பார்கள். இதன் காரணமாக உடன் பிறந்தவர்களுக்கு இவர்களை பிடிக்காமல் போவதுண்டு. சரியான புரிதல் ஏற்படாமல் உடன் பிறந்தவர்களே எதிரிகளாக மாறுகின்றனர்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.