
ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் வீரம், கோபம் மற்றும் வேகத்திற்கு அதிபதியாக கருதப்படுகிறார். ராகு பகவான் எதிர்பாராத மாற்றங்கள், பிடிவாதம் மற்றும் பிரம்மாண்டம் ஆகியவற்றின் காரகராவார். இவர்கள் இருவரும் ஒரே ராசியில் இணையும் பொழுது சில ராசிக்காரர்களுக்கு கட்டுக்கடங்காத கோபம், ஆவேசம், ஆக்ரோஷம் ஆகியவை அதிகரிக்க கூடும். நெருப்பு கிரகமான செவ்வாயும், நிழல் கிரகமான ராகுவும் இணைவது ஒரு விதமான வெடிக்கும் தன்மையுள்ள ஆற்றலை உருவாக்கும்.
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்ப ராசியில் இந்த சேர்க்கை நிகழ இருக்கிறது. செவ்வாய் ராகு சேர்க்கையால் உருவாகும் அங்காரக யோகத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். சிறிய விஷயங்களுக்கு கூட பெரிய அளவில் கோபம், தீ, மின்சாரம் மற்றும் ஆயுதங்களால் பாதிப்பு, உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபம், உலக அளவில் அரசியல் ரீதியான மோதல்கள் அல்லது இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
அங்காரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த காலகட்டத்தில் தேவையற்ற கோபம், பிடிவாதம், உடல் நலக்கோளாறுகள் ஏற்படலாம். குறிப்பாக இரத்த அழுத்தம், வெப்பம் சார்ந்த நோய்கள் உங்களை வாட்டி வதைக்க கூடும். உங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறு ஏற்படலாம். நிதி ரீதியான பிரச்சினைகளை சந்திக்கலாம்.
தேவையற்ற விஷயங்களுக்காக காவல் நிலையம் அல்லது நீதிமன்றங்களுக்கு அலைச்சல் ஏற்படலாம். பணம் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உங்கள் உடல் மற்றும் மனநலமும் பாதிக்கும். தேவையற்ற மன அழுத்தம், சோகம் அல்லது மனச்சோர்வு ஏற்படலாம். எலும்பு மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும்.
கும்பத்தில் உருவாகும் செவ்வாய் ராகு கூட்டணி சிம்ம ராசியை நேரடியாக பாதிக்க இருக்கிறது. இதன் காரணமாக கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு விரிசல்கள் ஏற்படலாம். வேலை வாய்ப்பு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.
இந்த இணைப்பானது உங்களை சிக்கலில் விழ வைக்கலாம். வேலை மற்றும் தொழிலில் முன்னேற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிரிகள் உங்கள் முன்னேற்றத்தில் தடைகளை ஏற்படுத்தலாம். உடல்நலம் மற்றும் தொழில் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பொது இடங்களில் பேசும் பொழுது வார்த்தைகளில் நிதானம் அவசியம்.
கடக ராசிக்கு எட்டாம் இடத்தில் இந்த யோகம் உருவாவதால் இது அஷ்டம அங்காரக நிலையை உருவாக்குகிறது. இதன் காரணமாக எதிர்பாராத மருத்துவ செலவுகள் அல்லது சிறு விபத்துக்கள் ஏற்படலாம். மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். இயந்திரங்களுடன் வேலை செய்பவர்கள் மற்றும் தீ சார்ந்த துறையில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் நிதி இழப்புகளை சந்திக்க நேரிடலாம் என்பதால் பண விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். வேலை மற்றும் வணிகம் தொடர்பான முடிவுகளில் பொறுமையை கையாள வேண்டும். எந்த ஒரு பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன்னர் அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம்.
செவ்வாய் பகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகம் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். சுக ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாவதால் தாய் வழி உறவுகளில் கசப்புணர்வு, சொத்து தகராறுகள் ஏற்படலாம்.
வீடு அல்லது வாகனங்களில் பழுதுகள் ஏற்படலாம். அதற்காக அதிகம் செலவிட வேண்டிய சூழல் உருவாகலாம். உங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கலாம். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பலாம். சமூகத்தில் மரியாதையை பராமரிக்க நீங்கள் அதிகமாக போராட வேண்டி இருக்கும்.
அங்காரக யோகத்தின் எதிர்மறை தாக்கத்தை குறைப்பதற்கு சில பரிகாரங்களை மேற்கொள்ளலாம். செவ்வாயின் அதிபதியான முருகப்பெருமானை வணங்குவது சிறந்த பலன்களைத் தரும். ராகுவின் தாக்கத்தை குறைக்க ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடலாம். ஏழை, எளியவர்களுக்கு பருப்பு தானம் செய்வது, ஆடை தானம் செய்வது நல்லது. தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு மௌன விரதம் மேற்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)