
நவகிரகங்களில் சனி பகவான் முக்கியத்துவம் வாய்ந்தவர். இவர் நாம் செய்யும் கர்ம வினைகளின் அடிப்படையில் நமக்கு பலன்களை அளிக்கிறார். ஒன்பது கிரகங்களில் மிக மெதுவாக நகரும் கிரகமாக சனி பகவான் அறியப்படுகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார்.
இந்த நிலையில் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் குடியேற இருக்கிறார். சனி பகவானின் இந்த நட்சத்திர மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறை பலன்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சனி பகவானின் இந்த நட்சத்திர மாற்றமானது ரிஷப ராசிக்காரர்களுக்கு பின்னடைவை கொடுக்கலாம். உடல் நிலையில் கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல்நலக் கோளாறுகள் மீண்டும் தலை தூக்கலாம். இதன் காரணமாக மருத்துவ செலவுகள் கணிசமாக அதிகரிக்கலாம். மருத்துவ செலவு காரணமாக சேமித்து வைத்த சேமிப்புகள் குறையலாம். தொழில் வாழ்க்கையிலும் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்படலாம்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். உங்களை பணியில் இருந்து வெளியேற்ற உயர் அதிகாரிகள் சக ஊழியர்கள் முயற்சி செய்வார்கள். பல்வேறு சதித்திட்டங்களையும் தீட்டுவார்கள். எனவே இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் மீது விழும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருங்கள்.
சனி பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது சிம்ம ராசியின் எட்டாவது வீட்டில் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது. இதன் காரணமாக உடல் நிலையில் கடும் பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக குடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே எண்ணெயில் பொறித்த உணவுகள், துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. செரிப்பதற்கு கடினமான கொழுப்பு உணவுகள், அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இந்தக் காலகட்டத்தில் பல விசித்திரமான நோய் அறிகுறிகள் தோன்றி உங்களை அச்சத்திற்கு ஆளாக்கும். எனவே ஏதாவது மாற்றம் தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். உடல் நலக் கோளாறுகள், தொழிலில் நஷ்டம், வியாபாரத்தில் வருமானம் குறைவு ஆகியவற்றின் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கலாம். பணத் தேவையும் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழலும் உண்டாகலாம்.
சனி பகவானின் நட்சத்திர மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் பாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்த உள்ளது. சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் பின்னடைவு ஏற்படலாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகையை கைமாற்றுதல் கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் பரிவர்த்தனைகளில் ஈடுபடுதல் கூடாது. ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பிற பரிவர்த்தனைகளின் போது கவனமாக இருக்க வேண்டும்.
தேவையில்லாத பழிச்சொல் உங்கள் மீது விழக்கூடும். சிலர் உங்களை தவறாக பயன்படுத்தி தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்க வைக்கலாம். வேலை செய்யும் இடங்களிலும் சிக்கல் உண்டாகலாம். தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்திக்கலாம். குடும்ப வாழ்க்கையிலும் சலசலப்புகள் ஏற்படலாம்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் குடியேறுவது கும்ப ராசியின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்க இருக்கிறது. இவர்கள் தொழில் வாழ்க்கையில் கடுமையான தடைகளை சந்திக்க இருக்கின்றனர். புதிய ஒப்பந்தங்கள், ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதங்கள் அல்லது சிரமங்கள் ஏற்படலாம். அரசு அனுமதி கிடைப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்களுடன் சண்டைகள் ஏற்படக்கூடும்.
பூர்வீக சொத்து அல்லது பரம்பரை சொத்து விவகாரங்களில் சிக்கல்கள் தொடர்ந்து நீடிக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். சிறு காயங்கள் ஏற்படலாம். நிதி நிலைமையில் பின்னடைவுகள் ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழல்களும் உண்டாகக்கூடும். எனவே கும்ப ராசிக்காரர்களும் இந்த காலத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)