
ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் பெயர்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அப்படியே கிரகங்கள் பெயர்ச்சியாகும் பொழுது சில ராசிக்காரர்கள் சுபமான பலன்களையும், சில ராசிக்காரர்கள் அசுப பலன்களையும் அனுபவிக்கின்றனர். அந்த வகையில் நவம்பர் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நிகழவுள்ளது. இந்த கிரக மாற்றங்கள் சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த காலகட்டத்தை அளிக்க வாய்ப்பு உள்ளது. ஜோதிட கணிப்புகளின் படி நவம்பர் 2025-ல் அதிக கவனத்துடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டிய ராசிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் கலவையான பலன்களைத் தரக்கூடிய மாதமாக இருக்கும். மாதத்தின் ஆரம்பத்தில் எதிர்பாராத சவால்கள் மற்றும் தடைளை சந்திக்க நேரிடலாம். உங்கள் கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். அவசரப்பட்டு பேசுவது அல்லது உணர்ச்சிவசப்படுவது உறவுகளிலும், பணியிடத்திலும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். வயிறு தொடர்பான சிறு சிறு உபாதைகள் வரலாம். எனவே உடல் காட்டும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் பொழுது கோபத்தை தவிர்த்து, நிதானமாக பேச வேண்டியது அவசியம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொதுவாக நல்ல மாற்றங்களை கொடுக்கும் என்றாலும், சில குறிப்பிட்ட விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். நிதி நிலைமை மற்றும் தேவைகளை நிறைவேற்றுவதில் பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பணம் வருவதில் தாமதம் ஏற்படலாம். காதல் மற்றும் குடும்ப உறவுகளில் கவனமாக இருக்க வேண்டும். தவறான புரிதல்களால் மனஸ்தாபங்கள் வரலாம். ஆபத்தான முதலீடுகளில் ஈடுபடுவது அல்லது வேலையில் அவசர முடிவெடுப்பதை தவிர்ப்பது நல்லது. செலவுகளை கட்டுப்படுத்தி நிதி திட்டமிடலை சரியாக செய்ய வேண்டியது அவசியம். காதல் உறவுகளில் வெளிப்படையும், நம்பிக்கையும் முக்கியம்.
புதனை ராசிநாதனாக கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் தொழில் ரீதியாக சற்று சவாலானதாக இருக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதில் தாமதங்கள் அல்லது சிக்கல்கள் எழலாம். தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு நிதி இழப்புகள் அல்லது எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சிக்கல்களுக்கு சரியான தீர்வை காண முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். இதனால் மனமுடைந்து போகவும் வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் உடல் நலனிலும் அதிக அக்கறை தேவை. அலைச்சல் மற்றும் வேலைப்பளு காரணமாக சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பல விஷயங்களில் சாதகமான சூழல் இல்லாமல் போகலாம். உங்களுடைய ராசியின் அதிபதியான சுக்கிரன் ஆட்சி வீட்டில் இருந்தாலும் மற்ற கிரகங்களின் தாக்கம் காரணமாக சில சவால்கள் உருவாகலாம். துலாம் ராசிக்காரர்கள் தங்கள் உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டி வரும். சிறிய உடல்நலக் குறைபாடுகள் கூட பெரிதாக வாய்ப்பு உள்ளது. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் மற்றும் ஆரோக்கியம் என பல முறைகளிலும் ஒரே நேரத்தில் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். இதனால் குழப்பம் மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம். பண விஷயங்களில் அதிக கவனமும், சிக்கனமும் தேவை. அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது.
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தனிப்பட்ட வாழ்க்கையிலும், உறவுகளிலும் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். துணையை விட்டு பிரிவது, உறவுகளில் விரிசல், விவாகரத்து போன்ற முடிவுகளை எடுக்கும் சூழல் சிலருக்கு ஏற்படலாம். இந்த மாற்றங்களை மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் கடக ராசிக்காரர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகலாம். உளவியல் ரீதியான இந்த பாதிப்புகளால் மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் சோர்வடைந்து போக வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் இருந்து மீண்டு வர சிறிது காலமும் தேவைப்படலாம். அலுவலக சூழலும் சிலருக்கு சாதகமாக இல்லாமல் போகலாம். மிகுந்த பதட்டம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கிரகங்களின் பெயர்ச்சிகள் என்பது எல்லா ராசிக்காரர்களுக்கும் நல்லது கெட்டது போன்ற கலவையான பலன்களையே தரும். நன்மை கிடைக்கும் பொழுது அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வது போல சவால்கள் வரும்பொழுது தைரியம், தன்னம்பிக்கை, பொறுமை, விடா முயற்சியுடன் செயல்படுவது அவசியம்.
இந்த மாதம் மேற்குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு சில சவால்கள் ஏற்பட்டாலும் இதை கடந்து செல்வதற்கு இறை வழிபாடு, தன்னம்பிக்கை, பொறுமை, நிதானம் ஆகியவை அவசியம். எனவே எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். உங்கள் இஷ்ட தெய்வம் அல்லது குலதெய்வத்தை வழிபடுங்கள். இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது கிரக தோஷங்களின் தாக்கத்தை குறைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)