
சுக்கிர பகவான் ஒரு ஜாதகத்தில் வலுவாக இருக்கும் பொழுது அவர் அந்த நபரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் உணர்ச்சி நிறைவை தருவதாக நம்பப்படுகிறது. சுக்கிர பகவானால் ஆசீர்வதிக்கப்பட்ட ராசிகள் சில உள்ளன. சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக இருக்கிறார். இவர் மீன ராசியில் உச்சம் பெறுகிறார். அதாவது மீன ராசியில் சுக்கிரனின் பலம் அதிகமாக இருக்கும். சுக்கிரனின் ஆசிபெறும் ராசிக்காரர்கள் பொதுவாகவே ஆடம்பரம், செழிப்பு, கலைத்திறன் மற்றும் உறவுகளில் வெற்றியைப் பெறுகின்றனர். இந்த பலன்கள் ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் நிலைகள், திசை, கோச்சார நிலைகளை பொறுத்து மாறுபடலாம்.
சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதியாவார். எனவே ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே சுக்கிரனின் ஆசியை பெறுகின்றனர். ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கை, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நிறைவான மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர். அவர்கள் கலை, இசை, உணவு மற்றும் இயற்கை அழகு ரசிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். சுக்கிரனின் பலமான நிலை காரணமாக இவர்களுக்கு செல்வம் மற்றும் உறவுகளில் வெற்றி கிடைக்கும். இவர்கள் பொதுவாகவே அமைதியான மனநிலை, கவர்ச்சியான தோற்றம் மற்றும் உறுதியான உறவுகளை பேணுவதில் திறமை பெற்றவர்களாக இருப்பர். ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் ஆடம்பரத்தில் அதீத ஈடுபாடு அல்லது சோம்பேறித்தனம் ஏற்படலாம்.
துலாம் ராசியின் அதிபதியாகவும் சுக்கிர பகவான் விளங்குகிறார். இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரனின் ஆசியை முழுமையாக பெறுகின்றனர். இவர்கள் நல்ல அறிவு, நாகரீகம் மற்றும் சமநிலை உணர்வைக் கொண்டவர்கள். அவர்கள் உறவுகளில் மகிழ்ச்சி, சமூகத்தில் மரியாதையை பெறுகின்றனர். சுக்கிரனின் ஆதிக்கம் இவர்களை கவர்ச்சிகரமானவர்களாகவும், பேச்சுத் திறமை மிக்கவர்களாகவும் ஆக்குகிறது. இவர்கள் காதல், திருமணம், தொழில் முயற்சிகளில் வெற்றி பெறுவர். சுக்கிரன் சாதகமான நிலையில் இருக்கும் பொழுது இவர்களுக்கு செல்வமும், ஆடம்பரமான வாழ்க்கையும் கிடைக்கும் ஆனால் சுக்கிரன் பாதிக்கப்படும் சமயத்தில் முடிவெடுக்க முடியாமல் போவது, உறவுகளில் மோதல்கள் ஆகியவை ஏற்படலாம்.
விருச்சிகம் சுக்கிரனின் நட்பு ராசியாக கருதப்படுகிறது. சுக்கிரன் இந்த ராசியில் சாதகமாக இருக்கும் பொழுது உணர்ச்சி ஆழமும், அன்பும் அதீதமாக வெளிப்படுகிறது. விருச்சக ராசிக்காரர்கள் உறவுகளில் தீவிரத் தன்மையை பேணுபவர்களாக இருக்கின்றனர். சுக்கிரனின் ஆசி இவர்களுக்கு உறவுகளில் ஆர்வத்தையும் செல்வத்தில் முன்னேற்றத்தையும் தருகிறது. இவர்கள் எந்த விஷயமானாலும் அதில் தைரியமான முடிவுகளை எடுக்கின்றனர். சுக்கிரன் விருச்சிக ராசிக்கு சாதகமாக இருக்கும் நிலையில் உறவுகளில் வெற்றியும், செல்வமும் கிடைக்கும். ஆனால் சுக்கிரன் பாதிக்கப்படும் பொழுது பொறாமை அல்லது உறவுகளில் அதீத எதிர்பார்ப்புகள் ஏற்படலாம்.
மகர ராசிக்கு சுக்கிரன் நட்பு ராசியாக உள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றியையும், நிதி உறுதித் தன்மையையும் சுக்கிர பகவான் வழங்குகிறார். சுக்கிரனின் ஆதிக்கத்தால் மகர ராசிக்காரர்கள் செல்வம், ஆடம்பர வாழ்க்கை, நீண்ட கால உறவுகளைப் பெறுவர். இவர்கள் கலை மற்றும் அழகு ரசிக்கும் தன்மையும் கொண்டிருப்பர். இவர்கள் நிதி மற்றும் தொழிலில் வெற்றி பெறுவர். மேலும் உறவுகளின் நம்பகத் தன்மையை வெளிப்படுத்துவர். சுக்கிரன் பலவீனமாக இருக்கும் நிலையில் இவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிரமப்படலாம்.
மீன ராசியானது சுக்கிரன் உச்சம் பெறும் ராசியாகும். அதாவது மீன ராசியில் சுக்கிரனின் ஆற்றல் மிகுந்த உயர்ந்த நிலையில் செயல்படுகிறது. மீன ராசிக்காரர்கள் காதல், ஆன்மீகம். கற்பனைத் திறன் ஆகியவற்றில் சுக்கிரனின் ஆசியைப் பெறுகின்றனர். இவர்கள் கலை, கவிதை, இசை, ஆன்மீக பயணங்களில் ஈடுபடுவதற்கு சுக்கிரன் ஆதிக்கம் உதவுகிறது. இவர்கள் உணர்ச்சிவசப்பட்ட இரக்கம் உள்ள மற்றும் காதல் உணர்வு மிக்கவர்களாக இருப்பர். சுக்கிரனின் பலமான நிலை காரணமாக இவர்களுக்கு உறவுகளில் ஆழமான பிணைப்பும், கலைத்துறையில் வெற்றியும் கிடைக்கும். ஆனால் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் இவர்கள் உணர்ச்சி மிகுதியால் குழப்பம் அடையலாம்.
சுக்கிரனின் ஆசி ஒரு ராசிக்கு மட்டுமல்ல ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை, இடம், மற்ற கிரகங்களுடன் தொடர்பு மற்றும் திசை நிலைகளை பொறுத்து மாறுபடலாம். உதாரணமாக சுக்கிரன் 2,5,7,9,11-வது வீடுகளில் இருந்தால் அது செல்வம், காதல், மகிழ்ச்சியைத் தரும். சுக்கிரனின் கோச்சார நிலை ஒரு ராசியில் சாதகமாக இருக்கும் பொழுது அந்த ராசிக்காரர்களுக்கு தற்காலிக ஆசி கிடைக்கலாம். சுக்கிர திசை அல்லது சுக்கிர அந்தர திசை நடக்கும் பொழுது அந்த நபருக்கு செல்வம் பெருகலாம். சுக்கிரனின் ஆசியைப் பெறுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி அல்லது காமாட்சி அம்மனை வழிபட வேண்டும். சுக்கிரனுக்குரிய வைர மோதிரம் அணிய வேண்டும். வெள்ளை நிற உணவுகள், பால், வெள்ளை நிற ஆடைகள் ஆகிய பொருட்களை தானம் செய்யலாம். “ஓம் சுக்கராய நமஹ:” மந்திரத்தை 108 முறை ஜெபிக்கலாம்.
(குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலானது மட்டுமே. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் ஜாதகம் மாறுபடும் என்பதால் முழுமையான பலன்களை அறிந்து கொள்வதற்கு தகுதி வாய்ந்த ஜோதிடரை அணுக வேண்டியது அவசியம்)