
மேஷம் முதல் மீனம் வரையில் உள்ள ராசிக்காரர்களை விட தனுசு ராசிக்கார்கள் மட்டுமே கடந்த ஏழரை ஆண்டுகளாக தீமைகளை மட்டுமே அனுபவித்து வந்துள்ளனர். அவர்களது உடலில் உயிர் மட்டுமே எஞ்சிருக்கும். அந்தளவிற்கு எல்லாவற்றையும் தனுசு ராசியைச் சேர்ந்த அன்பர்கள் இழந்துள்ளனர்.
உயிரை தவிர எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் தனுசு ராசிக்கு எப்போது நல்லது நடக்கும் என்று கேட்கும் அளவிற்கு ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு யுகமாக கடந்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். சனி பகவான் நல்லது செய்யமாட்டாரா? குரு பகவான் நல்லது செய்யமாட்டாரா? ராகு கேது பகவான் நல்லது செய்திட மாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட தனுசு ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி தீமையை செய்ததோ இல்லையோ, நன்மை மட்டும் செய்யவில்லை. தனுசு ராசிக்கு 6ல் இருக்கும் குரு பகவான் ஊரெல்லாம் பகையை ஏற்படுத்துக் கொடுப்பார் என்பது பழமொழி. அதற்கேற்ப ஒவ்வொருவரையும் பகைத்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
ஆனால், தனுசு ராசியினரை பகைத்துக் கொண்டவர்கள் யாரும் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. காரணம், நேர்மை, நியாயத்திற்கு பெயர் போன தனுசு ராசிக்கு குரு பகவான் தான் அதிபதி. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்களே. அது போலத்தான், தனுசு ராசிக்காரர்கள் உடன் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் நன்மை உண்டாகுமே தவிர, தனுசு ராசியினருக்கு நன்மை எல்லாம் நடக்காது.
காசு, பணம் வந்தாலும் கடன் வாங்க வேண்டிய சூழல் இருந்து கொண்டே இருக்கும். வரவை விட செலவு தயாராக இருக்கும். கடந்த ஏழரை ஆண்டுகளாக படாத கஷ்டங்களை அனுபவித்து வந்த தனுசு ராசிக்காரர்கள் தற்போது இருக்கும் ஒரே நல்ல விஷயம் ஏழரை முடிந்தது தான். ஆனால், இன்னும் நல்லது நடக்கவே இல்லையே என்று புழம்பிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.
சரி, வரும் 9ஆம் தேதி நிகழக் கூடிய குரு வக்ர பெயர்ச்சியாவது நல்லது செய்யுமா என்று பார்க்கலாம் வாங்க. அக்டோபர் 9 ஆம் தேதி ரிஷப ராசியிலேயே வக்ரம் அடையும் குரு பகவான் தனுசு ராசியினருக்கு வேலையிலிருந்த பிரச்சனையை சரி செய்து கொடுப்பார். நினைத்தும் வேலை கிடைக்கும். சொந்தமாக பிஸினஸ் செய்யக் கூடிய யோகம் உண்டாகும்.
தனுசு ராசியினரைப் பொறுத்தவரையில் மட்டும் குரு பகவான் நல்லது செய்யலாமா வேண்டாமா என்று யோசித்து தான் செய்வார். அவர்களுக்கு வாழ்க்கையின் அனுபவத்தை புரிய வைத்து கடைசியில் நன்மை செய்வார். நீங்கள் கடனாக கொடுத்த பணம் கூட திரும்பி வரும். சுப செலவுகள் அதிகரிக்கும்.
சுப செலவுகள் அதிகரிக்க முதலில் கையில் காசு பணம் இருந்தால் மட்டுமே நடக்கும். அப்போ உங்களுக்கு காசு பணம் கொட்டும். கஷ்டங்களின் கடைசியில் இருக்கும் தனுசு ராசிக்காரர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருங்கள் என்று தனுசு ராசிக்காரனாக நான் சொல்கிறேன்.
அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி காலியாகும் நிலை உருவாகும். ஏமாறவும் வாய்ப்பு இருக்கிறது. எதையும் யோசித்து செய்ய வேண்டும். ரிஸ்க் மட்டும் எடுக்க வேண்டாம். பெற்றோருடன் பிரச்சனை ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் சண்டை சச்சரவு ஏற்படும். நீண்ட காலமாக குணமாகாத நோய்க்கு நிரந்தரமாக தீர்வு கிடைக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறக்கும். வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். வேலை வாய்ப்புகள் உடனுக்குடன் கிடைக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடனை திருப்பிக் கொடுப்பீர்கள்.
பிரிந்திருந்த கணவன் மனைவி கூட ஒன்றாக சேர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கும். விவாகரத்து பெற்று தனியாக வாழும் தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த குரு வக்ர பெயர்ச்சி 2ஆவது திருமணத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பார். அதோடு, உங்களது மனதை புரிந்து கொண்ட நல்ல மனைவியாக கிடைக்க வாய்ப்பு உண்டு.
கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு வக்ர பெயர்ச்சி பலன் உங்களை கோடீஸ்வரனாக்க போகிறது. அடுத்தவர்களின் நன்மையை பெரிதாக நினைக்கும் உங்களுக்கு இனி எல்லாமே பொற்காலம் தான். பரிகாரமாக முதலில் உங்களது குல தெய்வ கோயிலுக்கு சென்று ஒரு பூஜையை போடுங்கள். அதன் பிறகு குரு பகவான் ஸ்தலமான விளங்க கூடிய திருச்செந்தூர் சென்று சுப்பிரமணியரை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். திருச்செந்தூர் செல்ல முடியாத அன்பர்கள் பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வர எல்லாமே நன்மையாக நடக்கும்.
அக்டோபர் 9 ஆம் தேதி நிகழும் குரு வக்ர பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வரையில் நீடிக்கிறது. அதன் பிறகு மீண்டும் வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான் மே 14 ஆம் தேதி ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். தனுசு ராசிக்கு 7ஆவது வீடாக குரு பகவான் வருகிறார். இந்த 2025 ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன் பற்றி விரைவில் பார்க்கலாம்.