
துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு நல்ல முன்னேற்றத்தைத் தரும் ஆண்டாக அமையும். இந்த வருடத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்களை ஏளனமாக நினைத்தவர்கள் கூட உங்கள் திறமைகளைக் கண்டு அசந்து போவார்கள். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் இருந்த தடைகள் நீங்கும். மனதில் ஒரு வித நிம்மதியை உணர்வீர்கள். உங்களின் செல்வாக்கால் புதிய உயரங்களை அடைவீர்கள்.
ஆண்டின் தொடக்கத்தில் ஒன்பதாவது இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் ஜூன் 2, 2026 ஆம் தேதிக்குப் பின்னர் பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக தொழிலில் பல நேர்மறையான மாற்றங்கள் நடைபெறும்.
ஜவுளி, உணவு, கமிஷன் போன்ற தொழில்களில் இருப்பவர்களுக்கு லாபம் இருமடங்காகும். வியாபாரத்தில் நிலவி வந்த மந்த நிலைகள் நீங்கி தொழில் சூடு பிடிக்கும். திடீர் பணவரவால் சொத்துக்கள், அழகு, ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். வீட்டில் சுப விசேஷங்கள் நடக்கும்.
இழந்த அனைத்தையும் இந்த காலகட்டத்தில் மீட்டெடுக்க போகிறீர்கள். தூக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அகலும். வட்டிக்கு கடன் வாங்கி வந்தவர்களின் நிலை ஒட்டுமொத்தமாக மாறும்.
தாயார் மூலம் சொத்துக்கள் அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி படிப்பில் ஆர்வம் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
துலாம் ராசிக்கு சனி பகவான் ஆறாம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த காலகட்டத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பணி செய்து வருபவர்கள் பணியிடத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். மேல் அதிகாரிகளின் சொற்படி நடப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.
தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். தம்பதிகளுக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்கு மறு விவாகம் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வேலை பளுவால் உரிய நேரத்தில் சாப்பிடாமல் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்.
குறிப்பாக ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை ஆரோக்கியத்தில் சில பின்னடைவுகள் காணப்படும். செரிமானக் கோளாறுகள், வாய்வு பிடிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ஆறாம் இடத்தில் உள்ள சனி பகவான் கடன் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். இருப்பினும் நிதி சார்ந்த விஷயங்களை பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம். பண பரிவர்த்தனைகளின் போதும், பணம் கொடுக்கல், வாங்கலின் போதும் யாரையும் முழுமையாக நம்புதல் கூடாது. முக்கியமான விஷயங்களில் முடிவுகளை நீங்களே எடுக்க வேண்டும்.
துலாம் ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு பகவானும், லாப ஸ்தானத்தில் கேது பகவானும் சஞ்சரிப்பது வருமான உயர்வைத் தரும். ஐந்தில் உள்ள ராகு தொழில் மற்றும் உத்தியோகத்தில் நன்மைகளை தரக்கூடும். பங்குச் சந்தை முதலீடுகளில் மூலம் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்டத்துடன் கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்ல விரும்புவர்களின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். உயர்கல்வி வாய்ப்புகள் சிறிய தடைகளுக்கு பின்னர் சாதகமாகும். பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம். சிறு சிறு உடல் உபாதைகள் மருத்துவத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படும்.
ராகு மற்றும் கேது பகவானின் நிலை காரணமாக பொருளாதார நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் சில விரயங்களும் ஏற்படலாம். தாய் வழி சொத்துக்களை பிரிப்பதில் இருந்த பிரச்சனைகள் விலகும். பழைய பாக்கிகளை வசூல் செய்வது சாத்தியமாகும்.
மறைமுக எதிரிகள் விலகுவார்கள். மருமகன் அல்லது மருமகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். குடும்பத்தில் இருந்த வம்பு, வழக்குகள் பேசி தீர்க்கப்படும். தாய்மாமன் மூலம் அனுகூலம் உண்டாகலாம். வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சுணக்க நிலை மாறும்.
முருகப்பெருமானை வழிபடுவது இன்பங்களை அதிகரிக்கும். ராகு காலத்தில் துர்க்கை அம்மன் அல்லது காளிதேவியை வழிபடுவது ஏற்படும் தடைகளை நீக்க உதவும். தினமும் கால பைரவ அஷ்டகம் படிப்பது மனோபலத்தை தரும் காஞ்சி காமாட்சியை வழிபடுவது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)