
சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு சவாலான காலமாகவும், அதேசமயம் பல படிப்பினைகளை தரும் ஆண்டாகவும் அமைய இருக்கிறது. இந்த ஆண்டு அஷ்டம சனி காலம் என்பதால் கிரகங்களின் நிலையை அறிந்து அதற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படுவது அவசியம். லாப ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பொருளாதாரத்தில் வளர்ச்சி, தன வரவு, வீட்டில் சுப விசேஷங்கள் நடைபெறும் வாய்ப்புகள் உருவாகும். புதிய வாய்ப்புகள் கைகூடும். உங்களை ஏளனமாக நினைத்தவர்கள் உங்கள் திறமைகளை கண்டு வாயடைத்து போவார்கள். சவாலான காரியங்களையும் எளிதாக செய்து முடித்து வெற்றி வாகை சூடுவீர்கள்.
சிம்ம ராசியின் ஐந்து மற்றும் எட்டாம் வீட்டின் அதிபதியாக குரு பகவான் விளங்கி வருகிறார். ஜூன் 2, 2026 வரை சிம்ம ராசியின் 11வது வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் அவர், பின்னர் 12ஆம் வீடான விரய ஸ்தானத்திற்கு செல்கிறார். ஜூன் மாதம் வரை குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கலாம்.
அஷ்டம சனியின் காரணமாக வேலைப் பளு அதிகரிக்கலாம். எனவே கடின உழைப்பை மட்டுமே நம்ப வேண்டும். புதிய முதலீடுகளை செய்வதற்கு முன்னர் அனுபவமிக்கவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் நிதானம் தேவை.
ஆண்டின் முற்பகுதியில் லாபங்கள் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு வீடு கட்டுதல், திருமணம் போன்ற சுப செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற விரயங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும்.
பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் நல்ல வேலையில் அமர்வீர்கள். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம். சட்ட சிக்கல்களை நீதிமன்றத்தில் பேசி முடிப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக கூடலாம். இந்த காலகட்டத்தில் பணத்தை கடனாக வாங்குவதோ கொடுத்தலோ கூடாது.
சிம்ம ராசிக்கு ஆறு மற்றும் ஏழாம் வீட்டில் அதிபதியாக விளங்கி வரும் சனி பகவான் 2026 ஆம் ஆண்டு முழுவதும் உங்கள் ராசியின் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களை சுற்றி இருப்பவர்களின் உண்மை முகம் தெரியவரும். உண்மையாக இருப்பவர்கள் யார்? உங்களை பயன்படுத்தி கொள்பவர்கள் யார் என்கிற உண்மை தெளிவுபடும்.
சிறிய உடல் உபாதைகள் வந்து மறையும். சனி பகவானின் தாக்கம் இருப்பதால் தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. கணவன் மனைவியிடையே சிறு வாக்குவாதங்கள் வந்து மறையலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். குடும்ப ரகசியங்களை பொதுவெளியில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு முன்னர் ஜாதக பரிசீலனைக்குப் பின்னர் செய்யலாம். பண வரவில் முன்னேற்றம் இருக்கும். புதிய வாகனம் வாங்குதல், ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல், சுற்றுலா செல்லுதல் போன்ற இனிமையான பொழுதை கழிப்பீர்கள். சனி பகவானின் நிலை காரணமாக பணிச்சுமை அதிகரிக்கலாம்.
ஆரோக்கிய குறைபாடுகள் தலை தூக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களது செயல்கள் கோபத்தை தூண்டலாம். எனவே இந்த காலகட்டத்தில் நிதானத்தை கடைபிடிக்கலாம். பழைய வீட்டை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்வது நல்லது. திருமணம், கல்வி போன்ற சுப நிகழ்விற்கு எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். முன் கோபத்தால் வாய்ப்புகள் தள்ளிப் போகலாம் என்பதால் நிதானத்தை கடைபிடிக்கவும்.
டிசம்பர் 5, 2026 ஆம் தேதி வரை ராகு பகவான் ஏழாம் இடத்திலும், கேது பகவான் உங்கள் ராசியிலும் சஞ்சரிக்க இருக்கின்றனர். அஷ்டம சனியின் தாக்கம், ஜென்மத்தில் கேது பகவாபன், சம சப்தம ஸ்தானத்தில் ராகு ஆகியோர் இருப்பதன் காரணமாக இந்த காலகட்டத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யக்கூடாது.
வாழ்க்கையை கண்ணாடி பாத்திரம் போன்று கையாள வேண்டும். திருமணம் சார்ந்த விஷயங்களில் அவசரப்பட்டு முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரியோர்களின் ஆலோசனையுடன் திருமணம் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். ஏழாமிடத்தில் ராகு இருப்பதால் தவறான துணையை தேர்வு செய்ய நேரிடலாம். எனவே திருமணம் சார்ந்த முடிவுகளை சிறிது காலம் ஒத்தி வைப்பது நல்லது.
பெண்களுக்கு வேலையிடத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம். எனவே வேலையை மாற்றும் யோசனை ஏற்படக்கூடும். இந்த காலகட்டத்தில் ராகு கேது பகவான் சிலருக்கு பண வரவை அதிகரிப்பார். இருபறியாக இருந்த வேலைகள் முடிவடையும்.
விற்காமல் தங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பணியிடத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து உயர் அதிகாரிகளின் சொல்படி நடப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள செல்வ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பிட்டு, வெற்றிலை மாலை அணிவித்து வணங்கினால் தடைகள் விலகி சாதனைகள் படைக்க முடியும். தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது. வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபட தடைகள் அகலும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். மாதம் ஒருமுறை ஜென்ம நட்சத்திர நாளில் சிவாலயங்களில் கிரிவலம் செல்வது நவகிரக தோஷத்தை விலக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)