
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் நடக்கும் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக அதிர்ஷ்டகரமானதாக மாறும். மேலும் ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பது அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க இருக்கிறது. கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் தாமதங்கள் விலகும். மன சங்கடங்கள் நீங்கும். தைரியமும், தெம்பும் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும். மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வு தரும் பல நல்ல நிகழ்வுகள் நடக்கும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமைய இருக்கிறது.
கடக ராசிக்கு ஆறு மற்றும் ஒன்பதாவது வீட்டின் அதிபதியாக இருக்கும் குரு பகவான் வருடத்தின் ஆரம்பத்தில் பன்னிரெண்டாவது வீடான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஜூன் 2, 2026 ஜென்ம குருவாக உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அக்டோபர் 31ஆம் தேதிக்கு பின்னர் இரண்டாம் வீட்டிற்கு மாறுகிறார். முதல் ஆறு மாதங்கள் விரய ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.
இந்த காலகட்டத்தில் பெரிய அளவில் பணம் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். பெரிய தொகையை கடனாக கொடுக்க வேண்டாம். சிலருக்கு சுப செலவுகள் மிகுதியாகலாம். உயர்கல்வி, தொழில், உத்தியோகம் தொடர்பாக செலவுகள் ஏற்படலாம். பண வரவு தாராளமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத விரயங்களை சந்திக்க நேரிடும்.
ஜூன் மாதத்திற்குப் பின்னர் கடகத்தில் உச்சம் பெற்று குரு பகவான் சஞ்சரிக்கும் சமயத்தில் தொழிலில் பெரும் மாற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலையும், உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். சுயதொழில் செய்பவர்கள் புதிய கிளைகளை தொடங்குவீர்கள்.
கூட்டுத் தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும். அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் பண வரவு அபரிமிதமாக இருக்கும். வசூலாகாமல் இருந்த கடன்கள் வசூலிக்கப்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் பண விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும்.
கடக ராசியின் ஏழு மற்றும் எட்டாம் வீட்டின் அதிபதியாக விளங்கி வரும் சனி பகவான் ஒன்பதாவது இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக எதிர்மறை எண்ணங்கள் விலகும். கவலைகள் அனைத்தும் தீரும்.
2026 ஆம் ஆண்டு முழுவதும் உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள். எதிர்பாராத முன்னேற்றங்கள் வாழ்க்கையில் நடக்கும். பணியில் எதிர்பார்க்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடம் மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். புரிதல் உண்டாகும். திருமணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, சொத்து சேர்க்கை போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும். பணவரவால் குடும்பத்தின் பொருளாதார நிலைமை உயரும். தங்கம், வெள்ளி, நகைகள் போன்ற பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.
ஜூன் 2 ஆம் தேதிக்குப் பின்னர் வீட்டில் திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் களை கட்டும். குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களுக்கு ஜூன் மாதத்திற்கு பின்னர் கல்வியில் அசாத்தியமான முன்னேற்றம் இருக்கும்.
டிசம்பர் 5ஆம் தேதி வரை ராகு பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிலும், கேது பகவான் இரண்டாம் வீட்டிலும் இருப்பார்கள். அதன் பிறகு ராகு பகவான் ஏழாம் வீட்டிற்கும், கேது பகவான் ஜென்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைய இருக்கிறார்கள். ‘கெட்டவன் கெட்டதில் கிட்டிடும் ராஜயோகம்’ என்கிற பழமொழிக்கு ஏற்ப அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வருவது நல்லதாக கருதப்படுகிறது.
ராகு பகவான் எட்டாம் இடத்திற்கு செல்வதால் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் கை கொடுக்கலாம். ராகுவிற்கு குருவின் பார்வை விழுவதால் அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டம் ஆகும் வாய்ப்புக்கள் உள்ளது. வரும் தடைகள் அனைத்தையும் எளிதாக சமாளித்து வெற்றியைப் பெறுவீர்கள்.
குரு பகவான் உருவாக்கும் விபரீத ராஜ யோகத்தால் வீடு, மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றிகளைப் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகள் கைகூடும். சொத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தாமாக வெளியேறுவார்கள்.
அடமானம் வைத்த நிலங்கள், சொத்துக்கள் அல்லது நகைகளை மீட்டு எடுப்பீர்கள். வீடு கட்டும் கனவு நனவாகும். பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு மாறுவீர்கள். சகோதர, சகோதரிகளின் மூலம் நிதி ஆதாயங்கள் உருவாகலாம். உபரி வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள்.
திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிகுந்த நன்மைகளைத் தரும். சனிக்கிழமைகளில் ஏழை எளியவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு தானம் செய்வது ராகு கேது தோஷத்தை குறைக்க உதவும். ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட ராஜயோகம் உண்டாகும். கடக ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் ஒரு முறையாவது திருச்சியில் கோயில் கொண்டுள்ள சமயபுரம் மாரியம்மனை வழிபட சாதகமான பலன்கள் உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)