
2026 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வந்து சேரும் ஆண்டாக அமைய இருக்கிறது. நீங்கள் எடுக்கும் எந்த ஒரு செயலிலும் வேகம் இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். கிரக நிலைகளின் சாதகமான சஞ்சாரங்களால் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றங்கள் கிடைக்க இருக்கிறது. இதுவரை தடைபட்டு நின்ற அனைத்து காரியங்களும் இந்த வருடம் சுமூகமாக முடிவடைய இருக்கிறது.
ஜூன் 2026 ஆம் ஆண்டு வரை குரு பகவான் தனம் மற்றும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அதன் பின்னர் உங்கள் ராசியில் மூன்றாவது வீடான கடகத்தில் உச்சம் பெற்று அமர்கிறார். குரு பகவான் முதல் ஐந்து மாதங்கள் தன ஸ்தானத்தில் இருப்பதால் நீங்கள் திட்டமிட்டு செய்யும் ஒவ்வொரு காரியங்களும் வெற்றியில் முடியும்.
நீங்கள் எதிர்பார்த்த பணத்தை சம்பாதிக்க முடியும். தொழிலில் நீங்கள் விரும்பிய வேலை மாற்றம் அல்லது பதவி மாற்றம் கிடைக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்வீர்கள். நல்ல ஊதியத்தில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.
குருவின் பார்வையால் அசையா சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். தந்தை மற்றும் தாய் வழி உறவுகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். அடமானம் வைத்த நகைகளை மீட்கக்கூடிய அமைப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். அறிவுத் திறமையால் சுப பலன்களைப் பெறுவீர்கள்.
வேலையில்லாமல் தவித்து வருபவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். சமூகத்தில் பிறர் மதிக்கும் அளவிற்கு உயர்வான நிலையை அடைவீர்கள். மருத்துவச் செலவுகள் கணிசமாக குறையும். திருமணத்திற்கான முயற்சிகள் சாதகமாக இருக்கும்.
2026 ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசியின் பதினோராவது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்து தடையற்ற பணவரையும், வெற்றிகளையும் வழங்க இருக்கிறார். சனி பகவானின் நிலை காரணமாக இந்த ஆண்டு உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
பங்குச்சந்தை, ஒப்பந்த தொழில்கள், கமிஷன், ஏஜென்சி போன்ற தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். சனி பகவான் அல்லது ராகு கேது ஆகியோர் பதினோராவது வீட்டில் வரும்பொழுது சுய தொழில் பற்றிய ஆர்வம் அதிகரிக்கும். 11 வது வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பது சுய தொழிலுக்கான உந்துதலைத் தரும்.
புதிய தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் அல்லது பிற உதவிகள் கிடைக்கலாம். தொழிலை விரிவாக்கம் செய்ய வங்கிகளில் எளிதில் கடன் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, கூட்டுத் தொழில் லாபகரமானதாக மாறும்.
சனி பகவானின் அருளால் வராது என்று நினைத்திருந்த பழைய கடன்கள் வசூலாகும். பணப்புழக்கம் உயரும். சொந்த வீடு, நிலம் அல்லது புதிய வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் தங்கம் மீதான முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும்.
2026 ஆம் ஆண்டில் ராகு 10 ஆம் வீட்டிலும், கேது பகவான் நான்காம் வீட்டிலும் அமர்ந்து உங்கள் உழைப்பை சோதிப்பதோடு புதிய மாற்றங்களையும் தருவார்கள். டிசம்பர் 5, 2026 அன்று கேது பகவான் மூன்றாம் வீட்டிற்கும், ராகு பகவான் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாவார்கள்.
பொதுவாக நான்கு மற்றும் பத்தாம் இடங்களில் ராகு, கேது இருப்பது ஏழாம் இடத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தவறான வரன்கள் அமையலாம். அதேபோல் நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளுடன் எந்தவித கருத்து வேறுபாடும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாயின் ஆரோக்கியத்திலும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
தாய் வழி உறவுகளிடம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். தாய் வழி சொந்தங்களுடன் தேவையில்லாத பகைமை உருவாகலாம். புதிய சொத்துக்களை வாங்கும் போதும் விற்கும் பொழுதும் கவனத்துடன் இருக்க வேண்டும். சிலர் தவறான விலையை நிர்ணயம் செய்து விடுவார்கள். நிதி இழப்பு ஏற்படும் என்பதால் சாதக பாதங்களை அறிந்து செயல்பட வேண்டும்.
ராகு பகவான் தொழிற் ஸ்தானத்தில் இருப்பதால் வேலைப்பளு ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல்கள் உருவாகலாம். சோதனையான காலகட்டத்தை பொறுமையுடன் கடந்து வருபவர்களுக்கு ராகு பகவான் நல்ல பலன்களை அளிப்பார். பத்தாம் வீட்டில் இருக்கும் ராகு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை அளிப்பார். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.
வெள்ளிக் கிழமைகளில் மகாலெட்சுமி தாயாருக்கு நெய் தீபமேற்றி வழிபடவும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யவும். பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சி அஷ்டதசபுஜ மகாலெட்சுமியை வணங்கி வரவும். அர்த்தநாரீசுவரர் வழிபாடு சிறப்பத்தைத் தரும். சுப பலன்களை அதிகரிக்க கால பைரவருக்கு அரளி மாலை அணிவித்து வழிபடவும். 2026 ஆம் ஆண்டு உங்களுக்குப் பொருளாதார முன்னேற்றத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அள்ளித்தரும் பொற்காலமாக அமையும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)