
பிறக்க இருக்கும் 2026 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு லாபத்தை தரக்கூடிய ஆண்டாக இருக்கப் போகிறது. கிரக நிலைகள் மேஷ ராசிக்கு சாதகமாக இருப்பதால் இந்த வருடம் முழுவதும் உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இதுவரை நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். உங்கள் முயற்சியில் சிறு சிறு சங்கடம் வந்தாலும் அதை உங்கள் திறமையால் சரி செய்து முன்னேற்றம் பெறுவீர்கள்.
2026 ஆம் ஆண்டு துவக்கத்தில் குரு பகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். 2026 ஜூன் இரண்டாம் தேதிக்குப் பின்னர் நான்காவது வீடான சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக நீங்கள் இழந்த அனைத்தையும் மீட்பீர்கள். தடைபட்டு நின்ற காரியங்கள் அனைத்தும் மீண்டும் வேகமெடுக்கும்.
முன்னோர்களின் பரிபூரண ஆசிகளைப் பெறுவீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் சொத்துக்களில் இருந்த தகராறுகள் அகலும். திருமணத் தடைகள் விலகி திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம், வீடு கட்டுதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
குரு பகவானின் பெயர்ச்சிக்குப் பின்னர் சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் நிலவி வந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகி, பண வரவு அதிகரிக்கும். வசூல் ஆகாத கடன்கள் வசூலாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள். அடமானம் வைத்த பொருட்களை மீட்க கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
வீட்டில் தங்க ஆபரணங்கள் சேரும். சொத்துக்களின் மதிப்பு உயரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். குறிப்பாக மேஷ ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு தாய் வழி மூலம் சொத்துக்கள், பணம், நகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
2026 ஆம் ஆண்டு சனி பகவான் மேஷ ராசியின் 12 ஆம் வீடான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது மேஷ ராசிக்கு ஏழரை சனியின் காலமாகும். ஏழரை சனி துவங்கினாலும் மிகப்பெரிய பாதகங்கள் எதுவும் இல்லை. சனி பகவானின் அருளால் மார்ச் மாதத்திற்கு வரை எந்த பிரச்சனையும் ஏற்படாது.
மார்ச் மாதத்திற்குப் பின்னர் வேலைப்பளு அதிகரிக்கலாம் அல்லது தொழிலில் சற்று பின்னடைவுகள் ஏற்படலாம். இருப்பினும் நேர்மையான மனதுடன் நியாயமாக செய்யும் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். சனி பகவானின் அருளால் தடைகள் தகரும். இருந்த போதிலும் அனைத்து செயல்களிலும் நிதானம் தேவை. மாணவர்கள் கவனத்துடன் படிக்க வேண்டிய காலமாகும்.
சனி பகவான் விரய ஸ்தானத்தில் இருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படலாம். தூக்கமின்மை, கால் வலி, நரம்பு சம்பந்தமான உபாதைகள் வரலாம். முறையான உணவுப் பழக்கம், தியானம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியது அவசியம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானத்துடன் இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு முதல் ஆறு மாதங்கள் கடின உழைப்பு தேவைப்படலாம். ஜூன் மாதத்தில் குரு பெயர்ச்சிக்குப் பிறகு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணம் தொடர்பான விஷயங்களில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்கவும். அனாவசிய விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய காலகட்டத்தில் ராகு பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கும், கேது பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்திற்கும் சஞ்சரிக்க இருக்கின்றனர். லாப ஸ்தானத்தில் இருக்கும் ராகு பகவான் ஆண்டு முழுவதும் உங்களுக்குத் தேவையான பண வரவை அளிக்க காத்திருக்கிறார்.
வேகமாக தொடங்கி பாதியில் நின்ற அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெறும். அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்களை பிரிக்கும் பாகப்பிரிப்பினைகள் சமூகமாக நடக்கும். தொழிலில் வெற்றிகள் தேடி வரும். கடன் தொல்லையிலிருந்து முழுமையாக விடுபடுவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றங்கள் நடக்கும்.
ராகு கேது பகவானின் நிலை காரணமாக அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகளின் கல்வியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பெண்களுக்கு தந்தையின் வழியில் பூர்வீக சொத்துக்கள், பூர்வீக வீடு ஆகியவை கிடைக்கும்.
திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கலாம். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அல்லது பணிச்சுமை ஏற்படலாம். எனவே நிதானம் தேவை.
சனிக்கிழமைகளில் நவகிரக சந்நிதியில் எள் தீபம் ஏற்றி வழிபடுவது ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்க உதவும். செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது, வெள்ளிக்கிழமைகளில் லலிதா சகஸ்ரநாமம் படிப்பது ஆகியவை மன தைரியத்தைத் தரும். ஏழைகளுக்கு உணவு அல்லது போர்வை தானம் செய்வது சனியின் தாக்கத்தை குறைக்க உதவும். 2026 ஆம் ஆண்டு மேஷ ராசியினர் நிதானத்துடன், திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றிகரமான ஆண்டாக அமையும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)