
பிறக்க இருக்கும் 2026 ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு இன்பத்தில் திளைக்கும் ஆண்டாக அமையப்போகிறது. கன்னி ராசிக்காரர்களின் வீட்டில் பண மழை பொழிய உள்ளது. உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கை மேல் கிடைக்கும். தடைபட்ட பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மனதில் புதிய தெளிவும், உற்சாகமும் பிறக்கும். பொருளாதார ரீதியாக இந்த ஆண்டு சிறப்பான வளர்ச்சியைக் கொடுக்கும் ஆண்டாக அமைய இருக்கிறது.
கன்னி ராசியின் நான்கு மற்றும் ஏழாம் வீட்டின் அதிபதியான குரு பகவான் ஜூன் 2, 2026 வரை பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் பயணிப்பார். அதன் பிறகு 11-வது வீடான லாப ஸ்தானத்திற்கு பெயர்சியாவார். இதன் காரணமாக தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். சொந்தமாக தொழில் செய்ய நாட்டம் இல்லாதவர்களுக்கு கூட சுய தொழில் தொடங்கும் ஆர்வம் உண்டாகும்.
எடுத்த காரியங்கள் அனைத்தையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு குறையும். வேலை பார்த்துக் கொண்டே உப தொழில் செய்து லாபம் பார்க்கும் வழிகள் பிறக்கும். முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தடைபட்டு நின்ற காரியங்கள் துரிதமாக நடக்கும். கடுமையான உழைப்பின் மூலம் பலன்களைப் பெறுவீர்கள்.
கடந்த காலங்களில் நிலவி வந்த பல சிக்கல்கள், சங்கடங்களில் இருந்து விடுதலைப் பெறுவீர்கள். கடன்களை தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். திருமணத்தில் இருந்து வந்து தடைகள் அகலும். மறுமணத்திற்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல வரன் அமையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.
பிள்ளைகளால் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கி, நிம்மதி பிறக்கும். தொலைந்த அல்லது கையை விட்டுப் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கலாம். தாயார் மூலம் பூர்வீக சொத்துக்கள் அல்லது அதிர்ஷ்ட தொகை கிடைக்கும்.
ஐந்து மற்றும் ஆறாம் வீட்டில் அதிபதியான சனி பகவான் ஆண்டு முழுவதும் ராசியின் ஏழாம் வீட்டில் நின்று கண்டக சனியாக பலன்களை அளிக்க இருக்கிறார். ஏழாம் வீட்டில் சனி பகவான் இருப்பதால் கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கண்டக சனியின் தாக்கம் காரணமாக குடும்ப உறவுகளில் சிறு சலசலப்புகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் பேசும் பொழுது நிதானம் தேவை. ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது ஒற்றுமையை பலப்படுத்தும்.
பண வரவு ஏற்பட்டாலும் அதற்கு ஏற்ற வகையில் செலவுகளும் இருக்கும். சுப விரயங்கள் அதிகம் ஏற்படலாம். குருவின் பார்வை ராசியின் ஏழாம் இடத்தில் படும் காலகட்டங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணையலாம். படிக்கும் மாணவர்களுக்கும் இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும்.
உயில் எழுத, திருத்தம் செய்ய உகந்த நேரம் ஆகும். ஆவணங்கள் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் அகலும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சோம்பலை தவிர்த்து கடினமாக உழைப்பவர்களுக்கு அதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும்.
2026 ஆம் ஆண்டில் ராகு பகவான் ஆறாவது வீட்டிலும், கேது பகவான் 12-வது வீட்டிலும் சஞ்சரிக்க இருக்கிறார்கள். டிசம்பர் 5, 2026 முதல் கேது பதினோராவது வீடான லாப ஸ்தானத்திற்கும், ராகு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் செல்கிறார். எனவே இந்த காலகட்டத்தில் எதிரிகளை வெல்லும் தைரியம் உண்டாகும்.
போட்டிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பக்தி மார்க்கத்தில் மனம் செல்லத் தொடங்கும். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற தன்மையும், மனதில் ஒருவித பயமும் நிலவலாம். இதன் காரணமாக சிலருக்கு காரியத் தடைகள், கால தாமதங்கள் ஏற்படும். இருப்பினும் இறுதியில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
ராகு மற்றும் கேதுவின் நிலையால் வரவும், செலவும் சமமாக இருக்கும். நீங்கள் போட்ட பட்ஜெட்டை மீறி செலவுகள் அதிகரிக்கலாம். பட்ஜெட் அதிகரிப்பால் புதிய கடன் அல்லது கைமாறாக பணத்தை வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.
ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு கண் சிகிச்சை செய்ய வேண்டிய சூழலும் வரக்கூடும். பிறரின் குடும்ப விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
சனிக்கிழமைகளில் நவகிரகங்களை வணங்குவது நல்லது. வாரம் ஒரு முறை விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது சிறப்பு. வீட்டின் பூஜை அறையில் தேங்காயை இரண்டாக உடைத்து மஞ்சள் தடவி குங்குமம் வைத்து நெய் ஊற்றி தேங்காய் தீபம் ஏற்றி வழிபடலாம். ஊரின் எல்லை தெய்வம் அல்லது காவல் தெய்வங்களை வழிபடுவதன் மூலம் நினைத்ததை சாதிக்க கூடிய வல்லமை கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)