
உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் தங்களது அனுபவ அறிவால் வெற்றியை பெறப் போகிறீர்கள். பொறுப்புடன் செயல்பட்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர இருக்கிறீர்கள். உங்களின் கடந்த கால கஷ்டங்கள் 2026 முதல் முடிய இருக்கிறது. லட்சியங்களையும், கனவுகளையும் நிறைவேற்றும் முயற்சியில் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களின் செயல்பாடுகள் சமூகத்தில் உங்கள் செல்வாக்கை உயர்த்தும்.
கும்ப ராசிக்கு 2 மற்றும் 11வது வீட்டில் அதிபதியான குரு பகவான் மே 2 ஆம் தேதி வரை ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பார். ஜூன் 2, 2026 முதல் அவர் ஆறாம் வீடான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திலிருந்து பலன் தருவார். சுமார் ஐந்து மாதங்களுக்கு குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் சுப காரியங்கள் கைகூடி வரும்.
திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றின் நிலவிய தடைகள் அகலும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்கள் அதிக சம்பளத்தில் வேலைக்குச் செல்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு பன்மடங்கு லாபம் கிடைக்கும்.
புதிய வேலை கிடைப்பதால் வருமானம் உயரும். நிரந்தரமற்ற வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. செலவு குறைந்து சேமிப்பு உயரும். ஆரோக்கியத்தில் நேர்மறையான முன்னேற்றங்கள் காணப்படும்.
மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை சந்திக்க நேரிட்டாலும் இறுதியில் வெற்றி உங்கள் வசமாகும். பண பற்றாக்குறையால் நீங்கள் சந்தித்து வந்த அவமானங்கள் மறையும். தொழில் மற்றும் உத்தியோகம் சிறக்கும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாயாருக்கு இருந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கி, ஆரோக்கியம் மேம்படும்.
கும்ப ராசியின் அதிபதியான சனி பகவான் 2026 ஆம் ஆண்டு முழுவதும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை வெளியில் தெரியாமல் இருந்த உங்கள் திறமை வெளிப்பட ஆரம்பிக்கும். இதன் காரணமாக பாராட்டுகளைப் பெறுவீர்கள். நீண்ட வருடங்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி தேடி வரும்.
வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும். சிலர் புதிய சாதனைகளை படைப்பீர்கள். உங்களின் வளர்ச்சியை கண்டு பிறர் பொறாமை கொள்ளலாம். போட்டிகள் அதிகரிக்கலாம். பண வரவிற்கு எந்தக் குறையும் இல்லை என்றாலும் தேவையற்ற பிரச்சனைகளும் எழக்கூடும். நிதி சார்ந்த விஷயங்களில் யாரையும் நம்பக் கூடாது.
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் சனி பகவானின் அருளால் அகல தொடங்கும். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் அகலும். முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்கள் மறு வாழ்க்கைக்கு தயாராவீர்கள். கல்லூரியில் பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் வெற்றிகளைப் பெறுவீர்கள்.
அனைத்து துறைகளிலும் வேலை பார்த்து வருபவர்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள். தாய் வழி சொத்து, பூர்வீக சொத்து, கட்டிடம், நிலம் போன்றவற்றில் இறந்த தகராறுகள் நீங்கும். பாகப்பிரிவினைகள் சமூகமாக நடக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி வீட்டை மெருகேற்றுவீர்கள். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வதற்கு உகந்த காலமாகும்.
ஆண்டின் தொடக்கத்தில் ராகு பகவான் முதல் வீட்டிலும், கேது பகவான் ஏழாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். டிசம்பர் 5, 2026க்கு பின்னர் ராகு பகவான் 12ஆம் வீட்டிற்கும், கேது பகவான் ஆறாம் வீட்டிற்கு செல்ல இருக்கின்றனர். ராசியில் ராகு பகவான் இருப்பதன் காரணமாக தவறான தொழில் முதலீடுகள் ஏற்படக்கூடும். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக்கொள்ளலாம்.
முதலீடுகளில் வம்பு, வழக்குகள் ஏற்படலாம். தொழில் முயற்சிகள் அல்லது புதிய முயற்சிகளில் மிகுந்த கவனம் தேவை. உங்களிடமிருந்து விசுவாசமான வேலையாட்கள் விலகிச் செல்லலாம். நம்பகம் இல்லாத வேலையாட்களால், உங்களுக்கு மன நிம்மதியின்மை தரலாம். உடன் வேலை பார்த்தவர்கள் தாங்கள் செய்த தவறை உங்கள் மேல் திருப்பிவிடலாம்.
ராகு மற்றும் கேது பகவானின் நிலை காரணமாக பணியிடத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்கள் எழலாம். எனவே இந்த காலகட்டத்தை பொறுமையுடனும், நிதானத்துடனும் கடக்க வேண்டும். கால்நடைகள் மற்றும் விலங்குகளை வளர்ப்பவர்கள் கவனமாக பராமரிக்க வேண்டும்.
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ராகு மற்றும் கேது பகவானின் நிலை சில நன்மைகளையும் வழங்கும். வேறு மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் வெற்றிகளைப் பெற்று நன்மதிப்பைப் பெறுவீர்கள். குடியிருக்கும் வீட்டையே வாங்கும் சூழலும் உருவாகலாம்.
திருமணத்தடை அகல, உடல் ஆரோக்கியம் மேம்பட லட்சுமி நரசிம்மரை வழிபடலாம். வியாழக்கிழமைகளில் சாய்பாபாவை வழிபடுவது சுப பலன்களை அளிக்கும். வியாழக்கிழமை மாலையில் ஸ்ரீ லட்சுமி குபேரரை வழிபடுவது பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும். வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்களை விலக்குவதற்கு வாராகி அம்மன் அல்லது துர்க்கை அம்மனை வழிபடலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)