மழைக்காலங்களில் வேர் வாடல் நோய், நூற்புழுத் தாக்குதலால் ஏற்படும் தக்காளி விலை உயர்வைத் தடுக்க, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஒரு புதிய ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறை நஞ்சில்லா தக்காளியை உற்பத்தி செய்ய உதவுகிறது.
மழைக்காலங்களில் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் வேர் வாடல் நோய் மற்றும் நூற்புழுத் தாக்குதல். இதனால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு, சந்தையில் விலை உயர்கிறது. ஆனால், விளைச்சல் இல்லாததால் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை. இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) மற்றும் தைவான் நாட்டு உலக காய்கறி மையம் இணைந்து 'ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பத்தை' அறிமுகப்படுத்தியுள்ளன.
26
தொழில்நுட்பத்தின் ரகசியம் என்ன?
இந்த முறையில், நோய்களுக்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட இ.ஜி-203 (EG-203) என்ற கத்திரி ரகத்தின் வேர் பகுதியை (Rootstock), விவசாயிகள் விரும்பும் தக்காளி ரகத்தின் தண்டுப் பகுதியோடு (Scion) ஒட்டுக் கட்டி நாற்றுகள் உருவாக்கப்படுகின்றன.
36
இந்த முறையின் சிறப்பம்சங்கள்
நோய் எதிர்ப்பு
பாக்டீரியல் வேர் வாடல் மற்றும் நூற்புழுத் தாக்குதலுக்கு 100% எதிர்ப்புத் திறன் கொண்டது.
வெள்ளத்தைத் தாங்கும்
வயலில் 2 முதல் 3 நாட்கள் தண்ணீர் தேங்கி நின்றாலும் செடிகள் அழுகாமல் வளரும்.
அதிக மகசூல்
ஒட்டுக் கட்டாத செடிகளை விட, இவை அதிக காலம் பலன் தருவதோடு காய்ப்புத் திறனும் அதிகமாக இருக்கும்.
ரசாயனக் குறைப்பு
பூச்சிக்கொல்லி பயன்பாடு பெருமளவு குறைவதால், நஞ்சில்லா தக்காளியை உற்பத்தி செய்ய முடியும்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர், இந்த முறையில் தக்காளி பயிரிட்டு அமோக லாபம் ஈட்டியுள்ளனர். முன்பு வேர் வாடல் நோயால் 50% மகசூல் இழப்பு ஏற்பட்டதாகவும் ஆனால் இந்த ஒட்டுக்கட்டும் முறையில் இதுவரை 20 பறிப்புகள் மூலம் 10 டன் தக்காளி கிடைத்துள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன் மூலம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
56
பல்கலைக்கழகத்தின் உதவி
இது குறித்துப் பேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இது பி.டி (Bt) ரகம் அல்ல; இயற்கை முறையில் மேம்படுத்தப்பட்ட ரகம். சுண்டைக்காய் வேரில் ஒட்டுக் கட்டப்படும் நாற்றுகளை விட, இ.ஜி-203 கத்திரி வேர் அதிக பலன் தருகிறது" என்கின்றனர். இந்தத் தொழில்நுட்பம் ஏற்கனவே கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் வெற்றியடைந்துள்ளது. தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இது பரப்பப்பட்டு வருகிறது.
66
பயிற்சி பெற
இந்த ஒட்டுக்கட்டும் முறை குறித்துப் பயிற்சி பெற விரும்பும் விவசாயிகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் பாதுகாப்புத் துறையை அணுகலாம். விதைகள் பல்கலைக்கழகத்தில் இலவசமாக வழங்கப்படுகின்றன.தொடர்புக்கு, முனைவர் ஆனந்தராஜா: 94434 44383