திருமணமான 10 நாளில் பிரபல கால்பந்து வீரர் கார் விபத்தில் பலி! ரசிகர்கள் சோகம்! என்ன நடந்தது?

Published : Jul 03, 2025, 04:19 PM IST
Diogo Jota

சுருக்கம்

லிவர்பூல் எஃப்சி கால்பந்து வீரர் 28 வயதான டியாகோ ஜோட்டா ஸ்பெயினில் கார் விபத்தில் பலியானார். மற்றொரு கால்பந்து வீரரான அவரது சகோதரரான ஆண்ட்ரே சில்வாவும் விபத்தில் உயிரிழந்தார்.

Liverpool Footballer Diego Jota Dies In Car Crash: லிவர்பூல் கால்பந்து கிளப்பின் ஸ்டார் வீரரும், போர்ச்சுகல் அணியின் தேசிய வீரருமான 28 வயதான டியாகோ ஜோட்டா (Diogo Jota) ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினின் சமோரா மாகாணத்தில் உள்ள A52 நெடுஞ்சாலையில் செர்னாடில்லா என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டா

அதாவது டியாகோ ஜோட்டாவும், அவரது சகோதரர் 26 வயதான ஆண்ட்ரே சில்வாவும் லம்போர்கினி சொகுசு காரில் சென்றுள்ளனர். A52 நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது திடீரென டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தொடர்ந்து உடனடியாக கார் தீப்பிடித்து எரிந்தது.

கார் விபத்தில் இருவரும் உயிரிழப்பு

இந்த விபத்தில் டியாகோ ஜோட்டாவும், ஆண்ட்ரே சில்வாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சமோரா மாகாணத்தின் காவல் துறை அதிகாரிகளும், தீயணைப்பு துறையினரும் மற்றும் மருத்துவ பணியாளர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் இருவரையும் பிணமாகத் தான் மீட்க முடிந்தது.

10 நாட்களுக்கு முன்பு தான் திருமணம்

டியாகோ ஜோட்டா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ரூட் கார்டோசோவை மணந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். டியாகோ ஜோட்டா லிவர்பூல் கிளப்புக்காக 182 போட்டிகளில் 65 கோல்களை அடித்துள்ளார். கடந்த சீசனில் லிவர்பூல் பிரீமியர் லீக்கை வெல்ல பெரிதும் உதவியாக இருந்தார். மேலும் மெர்சிசைட் அணியுடன் FA கோப்பை மற்றும் லீக் கோப்பையையும் லிவர்பூல் கிளப் வெல்ல உதவியாக இருந்தார்.

ஆண்ட்ரே சில்வாவும் கால்பந்து வீரர் தான்

இதுதவிர போர்ச்சுகலுக்காக 49 போட்டிகளில் விளையாடி, இரண்டு முறை UEFA நேஷன்ஸ் லீக்கை வென்றுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்த டியாகோ ஜோட்டாவின் சகோதரரான ஆண்ட்ரே சில்வாவும் கால்பந்து வீரர் தான். இவர் போர்த்துகீசிய அணியான எஃப்சி பெனாஃபீலுக்காக ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார். டியாகோ ஜோட்டாவும், ஆண்ட்ரே சில்வாவும் உயிரிழந்தது கால்பந்து ரசிகர்களிடமும், போர்ச்சுகல் மக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து கூட்டமைப்பு இரங்கல்

இந்த இரண்டு பேரின் மறைவுக்கு போர்ச்சுகீசிய கால்பந்து கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போர்ச்சுகீசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பெட்ரோ புரோன்கா வெளியிட்ட அறிக்கையில், ''ஸ்பெயினில் டியோகோ ஜோட்டா மற்றும் ஆண்ட்ரே சில்வாவின் மரணத்தால் போர்ச்சுகீசிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் அனைத்து போர்ச்சுகீசிய கால்பந்து ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். டியோகோ ஜோட்டா ஒரு அசாதாரண நபராக இருந்தார், அனைத்து அணி வீரர்கள் மற்றும் எதிரிகளால் மதிக்கப்பட்டார்.

கால்பந்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு

''டியோகோ மற்றும் ஆண்ட்ரே சில்வாவின் மறைவு போர்த்துகீசிய கால்பந்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்புகளைக் குறிக்கிறது. எனது சார்பாகவும், போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பின் சார்பாகவும், டியோகோ மற்றும் ஆண்ட்ரே சில்வாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும், லிவர்பூல் எஃப்சி மற்றும் எஃப்சி பெனாஃபீல் ஆகிய கிளப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

ஒரு நிமிடம் மௌன அஞ்சலி

மேலும் "பெண்கள் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் ஸ்பெயினுடனான எங்கள் தேசிய அணியின் போட்டிக்கு முன்னதாக, போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பு ஏற்கனவே UEFAவிடம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது'' என்றும் பெட்ரோ புரோன்கா கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SAFF U17 Championship: கிரிக்கெட்டில் மட்டுமல்ல; கால்பந்திலும் பாகிஸ்தானை ஊதித் தள்ளிய இந்திய அணி!
செம! பிரதமர் மோடிக்கு ஸ்பெஷல் பிறந்த நாள் கிப்ட் கொடுத்த லியோனல் மெஸ்ஸி! என்ன தெரியுமா?