
Vozinha Mother Gets US Visa : 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில், பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்து, உலகத்தையே ஆச்சரியப்படுத்தியது கேப் வெர்டே அணி. அந்த அணியின் கோல்கீப்பர் வோசின்ஹோவின் அம்மாவுக்கு, ஒரு வழியாக அமெரிக்க அரசாங்கம் விசா வழங்கியுள்ளது. விசாவுக்கான கடுமையான விதிமுறைகள் மற்றும் பணக்கஷ்டம் காரணமாக, தனது அம்மாவுக்கு போட்டிக்கு வர முடியவில்லை என்று 40 வயதான வோசின்ஹோ போட்டிக்குப் பிறகு கண்ணீருடன் தெரிவித்திருந்தார். இந்த செய்தி பரவியதை அடுத்து, அமெரிக்க அரசாங்கமே நேரடியாகத் தலையிட்டு இப்போது விசாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரீஸ், வோசின்ஹோவின் தாயார் அனா கேண்டிடா எவோராவுக்கு விசா வழங்கப்பட்ட செய்தியை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் பேசியதாகவும், கேப் வெர்டேவின் அடுத்தப் போட்டியைக் காண அவரது தாயாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் ஜெஃப்ரீஸ் கூறினார். பொதுவாக, கேப் வெர்டே குடிமக்கள் அமெரிக்க விசா பெற வேண்டுமென்றால், சுமார் 12.5 லட்சம் ரூபாய் வரை பாண்ட் தொகையாக கட்ட வேண்டும் என்ற கடுமையான விதிமுறை உள்ளது.
வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்யும் அனா கேண்டிடாவுக்கு இந்தத் தொகையைத் திரட்ட முடியாததால்தான் விசா மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதை ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதி, வோசின்ஹோவின் குடும்பத்தினருக்கான அனைத்து விசா கட்டணங்களும், பாண்ட் தொகையும் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஃபிஃபா மற்றும் கேப் வெர்டே அரசாங்கத்தின் கூட்டு முயற்சியுடன் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஸ்பெயினைத் தடுத்த ஹீரோ
தங்களது உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாகக் களமிறங்கிய கேப் வெர்டே, தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்பெயினை எதிர்கொண்டது. ஸ்பெயின் வீரர்கள் தொடர்ந்து கோல் அடிக்க முயன்றபோதும், வோசின்ஹோ 8 அற்புதமான சேவ்களைச் செய்து கேப் வெர்டே அணியின் நட்சத்திரமாக மாறினார். அந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதும் வோசின்ஹோவுக்கே வழங்கப்பட்டது. போட்டிக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வெறும் 50,000 ஃபாலோயர்களைக் கொண்டிருந்த அவருக்கு, ஒரே இரவில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது.
ஞாயிற்றுக்கிழமை மியாமியில் சந்திப்பு
வரும் ஞாயிற்றுக்கிழமை மியாமியில், பலம் வாய்ந்த உருகுவே அணிக்கு எதிராக கேப் வெர்டே தனது அடுத்த குரூப் போட்டியில் மோதுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் போட்டியில், கேலரியில் அமர்ந்து தனது மகனின் ஆட்டத்தைக் காண அனா கேண்டிடா எவோராவுக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது கால்பந்து வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், மிகப்பெரிய கனவு மேடையில் தாயின் வரவு, வோசின்ஹோவுக்கும் கேப் வெர்டே அணிக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.