
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில், FIFA உலகக்கோப்பை 2026 தொடரின் 'குரூப் F' பிரிவில் ஜப்பான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு பிறகு, ஜப்பான் ரசிகர்கள் ஸ்டேடியத்தின் ஸ்டாண்டுகளை சுத்தம் செய்ததை பார்த்து, மீண்டும் ஒருமுறை உலகமே அவர்களைப் பாராட்டி வருகிறது.
இந்த நல்ல பழக்கம், 'சாமுராய் ப்ளூ' என்று அழைக்கப்படும் ஜப்பான் அணி ரசிகர்களின் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது. இன்று அதிகாலை நடந்த இந்த விறுவிறுப்பான போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே, ஜப்பான் ரசிகர்கள் குப்பைகளை சேகரித்து, தாங்கள் அமர்ந்திருந்த பகுதியை நேர்த்தியாக சுத்தம் செய்யும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்தக் காட்சிகள் உடனடியாக வைரலாகி, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது. FIFA-வும் தனது X தளத்தில், டல்லாஸ் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகளைப் பகிர்ந்திருந்தது.
இந்தச் செயலுக்கான காரணம் குறித்து ரசிகர் ஒருவர் விளக்கும்போது, "இது எங்கள் கலாச்சாரம். வீரர்கள், ரசிகர்கள், ஸ்டேடியம் என எல்லாவற்றுக்கும் மரியாதை கொடுப்பது. இங்கு வந்ததே எங்களுக்குக் கிடைத்த மரியாதை. அதனால், இடத்தை அசுத்தப்படுத்திவிட்டுச் செல்ல நாங்கள் விரும்பவில்லை. அதனால்தான் இதைச் செய்கிறோம்" என்றார். இந்த பழக்கம் புதிதல்ல. FIFA உலகக்கோப்பை, ஒலிம்பிக் போட்டிகள் போன்ற பெரிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில், போட்டி முடிந்ததும் ஸ்டேடியங்களை சுத்தம் செய்வதை ஜப்பான் ரசிகர்கள் வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள்.
1998-ல் பிரான்சில் நடந்த FIFA உலகக்கோப்பையின் போதுதான் இந்த வழக்கம் பரவலாகக் கவனிக்கப்பட்டது. அப்போது குரூப் ஸ்டேஜிலேயே ஜப்பான் அணி வெளியேறிய போதிலும், ரசிகர்கள் தாங்கள் இருந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டுச் சென்றனர்.
The reason Japan fans clean the stadium after each game. Respect. 🤝🇯🇵 pic.twitter.com/o9qJUOLefY
— FIFA (@FIFAcom) June 15, 2026
அதன்பிறகு, உலக அளவிலான போட்டிகளில் இது ஒரு வாடிக்கையான காட்சியாகிவிட்டது. கத்தாரில் நடந்த 2022 FIFA உலகக்கோப்பையில், ஜெர்மனிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றபோதும், ஜப்பான் ரசிகர்கள் கலிஃபா சர்வதேச ஸ்டேடியத்தை சுத்தம் செய்தனர்.
டல்லாஸ் ஸ்டேடியத்தில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவங்களுக்கு முன், ஜப்பான் அணி நெதர்லாந்துக்கு எதிராக ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை டிரா செய்தது. போட்டியின் இரண்டாம் பாதியில் நெதர்லாந்து வீரர் விர்ஜில் வான் டைக் முதல் கோல் அடித்தார். பின்னர் ஜப்பான் வீரர் நகாமுரா ஒரு கோல் அடித்து சமன் செய்தார். போட்டியின் 64-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் க்ரைசென்சியோ சம்மர்வில் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். ஆனால், 88-வது நிமிடத்தில் ஜப்பானின் டைச்சி காமடா ஒரு கோல் அடித்து, போட்டியை 2-2 என்ற பரபரப்பான டிராவில் முடித்தார்.
இந்த போட்டியின் மூலம் இரு அணிகளும் 'குரூப் F'-ல் தலா ஒரு புள்ளியுடன் சமநிலையில் இருந்தாலும், கால்பந்துக்கு அப்பாற்பட்டு, ஜப்பான் ரசிகர்களின் மரியாதையான கலாச்சாரம்தான் அனைவர் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளது. இது உலக விளையாட்டின் மிகவும் போற்றப்படும் மரபுகளில் ஒன்றாக மாறியுள்ளது.