FIFA : நெய்மர் ஆப்செண்ட்! உலகக்கோப்பையில் பிரேசிலுக்கு அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கும் மொராக்கோ

Published : Jun 13, 2026, 03:56 PM IST
Brazil Faces Morocco in FIFA World Cup Opener Without Injured Star Neymar

சுருக்கம்

FIFA World Cup : காயம் காரணமாக உலகக் கோப்பை முதல் போட்டியில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் விளையாட மாட்டார். மொராக்கோவுக்கு எதிரான இந்த போட்டியில் அவர் களமிறங்க மாட்டார் என பயிற்சியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரின் முதல் போட்டியில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் களமிறங்க மாட்டார். மொராக்கோ அணிக்கு எதிரான முதல் குரூப் போட்டியில், காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளாததால் நெய்மர் விளையாட மாட்டார் என்று பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி தெரிவித்துள்ளார். நெய்மர் குரூப் சுற்று போட்டிகள் முழுவதையுமே இழக்க நேரிடலாம் என்றும் சில தகவல்கள் வருகின்றன. இந்தப் போட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.

பிரேசில் அணியில் திறமையான வீரர்களுக்கு எப்போதுமே பஞ்சம் இருந்ததில்லை. ஒரே ஒரு வீரரை மட்டும் நம்பாமல், எல்லா இடங்களிலும் சிறந்த வீரர்களைக் கொண்ட அணியாகவே பிரேசில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால், கடந்த மூன்று உலகக் கோப்பைகளிலும் நெய்மரை மையமாக வைத்தே அணியின் வியூகங்கள் வகுக்கப்பட்டன. அதனால், நெய்மர் இல்லாமல் முதல் போட்டியில் களமிறங்கும் பிரேசில் அணியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.

பிரேசில் vs மொராக்கோ

2014-ல் செம ஃபார்மில் இருந்த நெய்மருக்கு, கொலம்பியாவுக்கு எதிரான போட்டியின்போது ஏற்பட்ட காயம், ஒட்டுமொத்த அணியையும் பாதித்தது. அந்தப் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாலும், ஜெர்மனியிடம் 7 கோல்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது பிரேசில். 2018-ல் காலிறுதியில் பெல்ஜியத்திடம் போராடித் தோற்றது. 2022-ல் மீண்டும் காலிறுதிப் போட்டி ஒரு சோகக் கதையாகவே அமைந்தது. குரோஷியாவுக்கு எதிராக நெய்மரின் தனிப்பட்ட திறமையால் பிரேசில் முன்னிலை பெற்றாலும், தடுப்பாட்டத்தில் ஏற்பட்ட சொதப்பல்களால் போட்டி பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது. அதில் பிரேசில் தோல்வியடைந்து வெளியேறியது.

இந்த முறை உலகக் கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டபோது, அதில் நெய்மர் பெயர் இருந்ததே ரசிகர்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. தொடர்ச்சியான காயங்கள் நெய்மரின் ஆட்டத்தை பாதித்திருந்தாலும், அவர் களத்தில் இருப்பது அணிக்கு ஒருவிதமான 'வின்னிங் மென்டாலிட்டி'யை கொடுக்கும். ஆனால், குரூப் சுற்று தொடங்குவதற்கு சற்று முன்பு ஏற்பட்ட இந்த காயம், மீண்டும் ரசிகர்களையும் அணியையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. எப்படியும், குரூப் சுற்று முடிந்த பிறகு நெய்மர் மீண்டும் களத்தில் இறங்குவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

அதே சமயம், பிரேசில் அணியின் முழு நம்பிக்கையும் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி மீதுதான் உள்ளது. முன்களத்தில் ரஃபின்ஹா, வினிசியஸ், குன்ஹா ஆகிய மூவரும் கிளப் போட்டிகளில் காட்டிய ஃபார்மை தொடர்ந்தால், பிரேசில் எளிதாக வெற்றி பெறும். இகோர் தியாகோ மற்றும் இளம் வீரர் என்ட்ரிக் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கின்றனர். நடுகளத்தில் கேசெமிரோ, புருனோ குய்மரெஸ், லூகாஸ் பக்வேட்டா ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாகவே பிரேசில் அணிக்கு தலைவலியாக இருக்கும் தடுப்பாட்டப் பிரச்சனைகளை மார்கினோஸ் மற்றும் கேப்ரியல் மீண்டும் ஏற்படுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு உள்ளது.

மறுபுறம், மொராக்கோ அணி செம ஃபார்மில் இருக்கிறது. இந்தத் தொடரின் 'கறுப்பு குதிரையாக' உருவெடுக்கவே மொராக்கோ வந்துள்ளது. அணியின் கேப்டனும் ஃபுல்-பேக் வீரருமான அஷ்ரப் ஹக்கிமி மற்றும் முன்கள வீரர் பிராஹிம் தியாஸ் மீது அணி அதிக நம்பிக்கை வைத்திருந்தாலும், கடந்த உலகக் கோப்பையைப் போலவே ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சியால் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசிலும் மொராக்கோவும் மோதுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 2002 உலகக் கோப்பையில் பிரேசில் 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நட்புப் போட்டியில், மொராக்கோ அணி பிரேசிலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வெற்றி பெற்றது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Messi: உலகக்கோப்பை தோல்வி... வலி தாங்க முடியல, ஆனா பெருமையா இருக்கு - மெஸ்ஸி உருக்கம்
FIFA Prize Money: தோத்த அர்ஜென்டினாவுக்கு 317 கோடி, ஜெயிச்ச ஸ்பெயினுக்கு எவ்வளவு?