
உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஒரு மாதமாக கத்தாரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா அணியும் பிரான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின் முதல் பாதியிலேயே மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இரண்டு கோல்கள் அடித்து முன்னிலையில் இருந்ததால் அந்த அணி எளிதில் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாபே இரண்டு நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து ஆட்டத்தை தலைகீழாக மாற்றினார். 90 நிமிட முடிவில் இரு அணிகளும் 2 - 2 என சமநிலையில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. அதிலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் முழுநேர முடிவில் 3 - 3 என ஆட்டம் டை ஆனது.
பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அர்ஜென்டினா அணி 3-2 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றி உலகக்கோப்பையை தட்டிச் சென்றது. இதன்மூலம் அந்த அணியின் 36 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்தது. அர்ஜென்டினாவின் வெற்றியை உலகமே கொண்டாடி வருகிறது.
இதையும் படியுங்கள்... FIFA World Cup: பரபரப்பான ஃபைனலில் 2 நிமிடத்தில் 2 கோல்கள் அடித்து ஆட்டத்தை புரட்டிப்போட்ட எம்பாப்பே
இந்நிலையில், மெஸ்ஸியின் தீவிர ரசிகனான ஜோஸ் மிகுவல் பொலான்கோ என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு போட்ட டுவிட் ஒன்று வைரலாகி வருகிறது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ந் தேதி பதிவிடப்பட்டுள்ள அந்த டுவிட்டில், “2022-ம் ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி, 34 வயதுடைய மெஸ்ஸி உலகக்கோப்பையை வென்று, தான் ஒரு தலைசிறந்த வீரர் என்பதை நிரூபிப்பார். 7 ஆண்டுகள் கழித்து பார்ப்போம்” என குறிப்பிட்டிருந்தார்.
அவர் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தது படியே அதே தேதியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றுள்ளதால், தற்போது ஜோஸ் மிகுவல் பொலான்கோ 7 ஆண்டுகளுக்கு முன்னர் போட்ட டுவிட் வைரலாகி வருகிறது. அந்த டுவிட்டை குறிப்பிட்டு எப்புட்ரா என பலரும் ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... FIFA World Cup 2022: நனவானது மெஸ்ஸியின் வாழ்நாள் கனவு.. ஃபிரான்ஸை வீழ்த்தி உலக கோப்பையை வென்றது அர்ஜெண்டினா