அன்னூர் பேருந்து நிலையத்தில் மனைவியின் கண் முன்னே கணவனை கள்ளக்காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுசிலா (23). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் குடியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இதனிடையே தஞ்சாவூரைச் சேர்ந்த பாலாஜி (24) என்பவர் இவருடன் கட்டிட வேலைக்கு வந்துள்ளார். அப்போது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கணேஷ் அவ்வபோது வீட்டுக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அப்போது கணேசின் மனைவி சுசிலாவிற்கும், பாலாஜிக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் தகாத உறவாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் பகுதியிலேயே தனியாக குடியிருந்து வந்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் காவல் நிலையத்தில் கணேஷ் அளித்த புகாரின் பேரில் சுசிலாவை மீட்ட காவல் துறையினர் பாலாஜியை எச்சரித்து சுசிலாவை கணேசனுடன் அனுப்பி வைத்துள்ளனர். தற்போது கணேஷ் அவரது மனைவி சுசிலா மற்றும் இரு குழந்தைகள் செஞ்சேரி பகுதியில் குடியிருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அன்னூர் ஸ்ரீ நகரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
திடீரென சரிந்து விழுந்த மேடை; சட்டென எகிறி குதித்து உயிர் தப்பிய அன்புமணி
இந்நிலையில் கணேஷ் தனது மனைவி சுசிலா மற்றும் இரு குழந்தைகளுடன் அன்னூர் பேருந்து நிலையம் வந்த போது அங்கு மறைந்திருந்த பாலாஜி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேசின் தலையில் பலமாக குத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னூர் காவல் துறையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த கணேசை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கள்ளக்காதலன் பாலாஜியையும் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அன்னூர் காவல் துறையினர் கைது செய்த பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பரபரப்பான காலை வேளையில் அன்னூர் பேருந்து நிலையத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.