11 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை

By SG Balan  |  First Published Apr 6, 2023, 9:07 AM IST

2015ஆம் ஆண்டு 11 பள்ளிச் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த அரசு தொடக்கப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தபோது மாணவிகளை ஆடைகளைக் கழற்ற வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுபற்றி யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மாணவிகளை மிரட்டியதாவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tap to resize

Latest Videos

பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தன் தாயிடம் புகார் கூறியதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் மீதான பல பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்தன. இதையடுத்து, கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அவர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், பள்ளியில் படித்த 11 சிறுமிகளை தலைமை ஆசிரியர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது தெரியவந்தது.

இந்த வழக்கின் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் இருந்து 43 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தேபாசிஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

போக்சோ சட்டம், 2012, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் 1989 ஆகியவற்றின் 12 பிரிவுகளின் கீழ் முன்னாள் தலைமை ஆசிரியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து புதன்கிழமை இந்த வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்துள்ளது.

குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது. அத்துடன் ரூ.47,000 அபராதமும் விதித்தது. அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவிகளில் 2 பேருக்கு தலா ரூ.5 லட்சமும், மற்ற 9 மாணவிகளுக்கு தலா ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்க மாவட்ட சட்ட சேவை ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

click me!