
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக கள் விற்கப்படுவதாக பல்வேறு புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில் சமயபுரம் அருகே உப்பாற்று பகுதியில் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் சக்திவேல் முருகன் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது உப்பாற்றின் அருகே மாணிக்கப்புறசாலையில் கல்லூரி மாணவர்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டு அங்கு சென்றபோது கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அப்பகுதியில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சட்டத்திற்கு புறம்பாக கள் விற்கப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 150 லிட்டர் கள் மற்றும் கள் இறக்குவதற்கும், கலப்படம் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த ராஜன் (வயது 47) என்பவரை கைது செய்து சமயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சமயபுரம் காவலர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கள் மற்றும் கைது செய்யப்பட்ட ராஜனை ஒப்படைத்தார்.
தந்தையின் பிறந்தநாளில் மக்களுக்கு பரிசு பொருட்களை வாரி வழங்கிய உதயநிதி
சமயபுரம் காவல் நிலையம் ஒரு கிலோமீட்டருக்கு அருகே தினமும் கள் விற்கப்படும் நிலையில் கையூட்டு பெற்றுக் கொண்டு, இதனை கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில், வட்டாட்சியர் சக்திவேல் முருகன் பறிமுதல் செய்வது பொதுமக்களிடமும், சமூக ஆர்வலர்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த ஊரில் 144 தடை உத்தரவு; மோதலை தவிர்க்க அதிகாரிகள் அதிரடி
இந்த ஆய்வின் போது மண்டல துணை வட்டாட்சியர் பழனிவேல், வருவாய்த் துறை ஆய்வாளர் திவ்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.