திமுக பிரமுகர் கொலை? புதுக்கோட்டையில் 3 நாட்களாக தொடரும் பரபரப்பு

By Velmurugan sFirst Published May 22, 2023, 10:16 AM IST
Highlights

புதுக்கோட்டையில் திமுக பிரமுகர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை வலியுறுத்தி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 3 நாட்களாக பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த வெள்ளக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 50). திமுக பிரமுகரான இவர் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் ரவியை தேடி சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் உடலில் ரத்த காயங்களுடன் கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ரவியை கொலை செய்தவர்கள் மீது நடவடிக் எடுத்தால் மட்டுமே அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புவோம் என்று கூறி அவரது உறவினர்கள் சுமார் 3 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துறை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுட்டார். அதன் அடிப்படையில் ரவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்ற நுங்கு வண்டி பந்தயம்; தங்க காசை தட்டிச்சென்ற சிறுவர்கள்

முன்னதாக ரவியின் நிலத்தை கேட்டு அருகில் நிலம் வைத்துள்ளவர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகவும், ஆனால் அதற்கு ரவி மறுப்பு தெரிவித்து வந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் கொலை தொடர்பாக சிலரது பெயர்களை குறி்ப்பிட்டு ரவியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். ரவியின் மரணத்தை மர்ம மரணம் என்று இல்லாமல் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் ரவியின் கொலை தொடர்பாக உறவினர்கள் குறிப்பிட்ட நபர்கள் அரசியல் பின்புலம் கொண்டவர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் தயங்குவதாக கூறி ரவியின்  உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், ரவியின் மரணமானது சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரியில் தலை துண்டான நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு; உறவினர்கள் போராட்டம்

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணம் குறித்து தெளிவான முடிவிக்கு வர முடியும். அறிக்கையில், ரவி கொலை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடும் பட்சத்தில் நிச்சமயாக இது கொலை வழக்காக மாற்றப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். இருப்பினும் ரவியின் உறவினர்கள் தொடர்ந்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

click me!