மும்பையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் குக்கரில் வேக வைத்து நாய்களுக்கு போடப்பட்டதாக வெளியான தகவல் குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்
மும்பை மீரா ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது மாடியில் அமைந்துள்ள வீட்டில் மனோஜ் சாஹ்னி (56) என்பவரும், சரஸ்வதி வைத்யா (32) என்ற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாக லிவ் இன் பார்ட்னர்களாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த வீட்டில் இருந்து அழுகிய நிலையில், துண்டுதுண்டுகளாக வெட்டப்பட்ட சரஸ்வதி வைத்யாவின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்துள்ளதாக, மும்பை துணை காவல் ஆணையர் ஜெயந்த் பஜ்பலே தெரிவித்துள்ளார். அப்பெண்ணின் உடல் மர அறுவை இயந்திரம் கொண்டு இரண்டாக துண்டிக்கப்பட்டு, பின்னர் உடல் பாகங்கள் சிறிது சிறிதாக வெட்டப்பட்டு அவை குக்கரில் வேக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மனோஜ் சாஹ்னி கைது செய்யப்பட்டுள்ளார். அவரை போலீஸ் காவலில் வைத்து வருகிற 16ஆம் தேதி வரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதனிடையே, சரஸ்வதி வைத்யா உடல் பாகங்கள் குக்கரில் வேக வைக்கப்பட்டு நாய்களுக்கு போடப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. இதுகுறித்து ஜெயந்த் பஜ்பலே கூறுகையில், பெண்ணின் உடல் பாகங்கள் குக்கரில் வேக வைக்கப்பட்டது உண்மைதான். ஆனால், நாய்களுக்கு அவை போடப்படவில்லை. குக்கரில் வேக வைக்கப்பட்ட உடல் பாகங்களை, பிளாஸ்டிக் பைகளில் வைத்து குற்றவாளி அப்புறப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். பெண்ணின் உடல் பாகங்கள் ஜே.ஜே.மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயந்த் பஜ்பலே தெரிவித்துள்ளார்.
நாட்டை உலுக்கிய லிவ்-இன் பார்ட்னர் கொலைகள்!
“குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக எங்களுக்கு புகார் வந்தது. போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சமையல் அறையில் ஏராளமான பாத்திரங்கள் மற்றும் வாளிகளில் சடலத்தின் துண்டுகள் கிடந்தது. சம்பவம் நடைபெற்று 3 அல்லது 4 நாட்கள் இருக்கும். அதன்பிறகே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், லிவ் இன் பார்ட்னர்களாக வாழ்ந்து வந்த சரஸ்வதி வைத்யா - மனோஜ் சாஹ்னி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட சண்டைதான் கொலைக்கு காரணம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் உட்கர்ஷா ரூப்வதே கூறுகையில், “சரஸ்வதி வைத்யா - மனோஜ் சாஹ்னி இடையே ஏற்பட்ட சண்டையே கொலைக்கான காரணம் என்றும், அதன் பிறகு அந்த பெண் விஷம் குடித்ததாகவும் கூறப்படுகிறது. மனோஜ் சாஹ்னி வாக்குமூலத்தை போலீசார் பெற்றுள்ளனர். தொடர் விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவரும். இவ்வளவு பெரிய குடியிருப்பில் அந்தச் சம்பவம் யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது என்பதுதான் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம். கடந்த 2-3 நாட்களாக ஒருவர் காணாமல் போயிருந்தால், அந்த நபர் ஆபத்தில் இருக்க வாய்ப்புள்ளது. நாம் ஒருவருக்கொருவர் விழிப்புடன் இருக்க வேண்டும், அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியும்.” என்றார்.