ஈரோட்டில் முன்னாள் எம்எல்ஏக்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் தொழில் அதிபர்களிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு போன் மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் காங்கேயம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பேசுவதாக கூறி பணம் கேட்டுள்ளார். இதையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர் மேலாளர் மூலம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பண பரிவர்த்தனை மூலம் அனுப்பி உள்ளனர். இதன் பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நிறுவனத்தின் மேலாளர் ஈரோடு சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த 4ம் தேதி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், திருச்சி பேருந்து நிலையத்தில் உள்ள பண பரிவர்த்தனை கடைக்கு பண பரிவர்த்தனை நிகழ்ந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரை சைபர் க்ரைம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில், 63 வயதாகும் இவர் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய தொழில் அதிபர்களிடம் முன்னாள் எம்எல்ஏ, எம்பி மற்றும் தற்போதைய எம்எல்ஏ, எம்பி ஆகியோரின் பெயரில் செல்போன் மூலம் பேசியது தெரிய வந்தது.
குறிப்பாக தொகையை சேவை செய்ய வேண்டும் என கேட்டு பெற்றுள்ளார். இது வரை 4 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து இருப்பதாக ஒப்புக்கொண்ட நிலையில் லட்ச கணக்கில் பணம் பெற்றிருக்கக் கூடும் என சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ச்சுனன் பெயரில் தொழில் அதிபர்களிடம் பணம் வசூல் செய்ய பயன்படுத்திய செல்போன் எண்ணும், இவர் பயன்படுத்தி செல்போன் எண்ணும் ஒன்று தான் என்பதால் இதே நபராக இருக்கலாம் என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட ரவியிடம் இருந்து போலீசார் செல்போன் 2, 3சிம் கார்டு மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களின் செல்போன் அடங்கிய நோட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.