பெரம்பலூர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் வைத்து மது விற்பனை செய்த நபர்களை தட்டிக்கட்ட பக்கத்து வீட்டுக்காரரை கணவன், மனைவி அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே ஊட்டத்தூர் செல்லும் சாலையில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஆனந்தகுமார். இவரது வீட்டில் இருந்து மூன்றாவது வீட்டில் சுரேஷ் என்பவர் வசித்துவந்துள்ளார். சுரேஷ் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக தனது வீட்டிலேயே மதுகடையை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மதுவாங்க வருவோர் நள்ளிரவு வேலைகளில் ஆனந்தகுமார் வீட்டின் கதவை தட்டி மதுபானங்களை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனை கண்டித்து சுரேஷிடம் நேரடியாக பலமுறை ஆனந்த குமார் முறையிட்டுள்ளார்.
பெண்பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இப்படி நள்ளிரவில் வருவோர் மதுபானம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், ஆதலால் உனது வீட்டின் முன்பாக மதுவிற்பனை தொடர்பாக பதாகை வைத்து விற்பனை செய் என ஆதங்கத்தோடு கூறி சென்றுள்ளார். இதனை துளியும் பொருட்படுத்தாத சுரேஷ் தனது மதுவிற்பனையை தீவிரமாக செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நாளுக்குநாள் மதுபிரியர்கள் தவறுதலாக வந்து ஆனந்தகுமார் வீட்டின் கதவை தட்டி மதுபானங்களை கேட்கும் நிகழ்வு அதிகரித்துள்ளது.
Child Death: வேலூரில் வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி; தன்னிச்சையாக நடை பழகியபோது நிகழ்ந்த சோகம்
இதனால் பொறுமை இழந்த ஆனந்தகுமார், பாடாலூர் காவல்நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால் பாடலூர் காவல் துறையினர் முறையான நவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. ஆனந்தகுமார் அடுத்தகட்டமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து நிம்மதியுடன் வீடுதிரும்பியுள்ளார். ஆனால் ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை புகார் செய்த தகவலை அறிந்துகொண்ட சுரேஷ், ஆனந்தகுமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். திட்டமிட்டபடி நேற்று வழக்கம்போல வாக்குவாதம் ஏற்படவே வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த ஆனந்தகுமாரின் மூன்று பிள்ளைகள் முன்பாக சுரேஷ், அவரது மனைவி கீதா மற்றும் 18 வயது கூட நிரம்பாத 2 மகன்கள் வீட்டில் இருந்து அடித்து இழுத்துவந்ததோடு தப்ப முயன்ற ஆனந்தகுமாரை கடப்பரை மற்றும் கம்பி, கற்கள் உள்ளிட்டவற்றால் கொடூரமாக தாக்குதல் நடத்தி வீட்டின் சந்துக்கு இழுத்துச்சென்று தாக்கியதில் அவர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.
ஆத்திரத்தில் கொலைசெய்த சுரேஷ் தனது குடும்பத்துடன் தலைமறைவாக தயாராகியுள்ளார். தொடர்ந்து ஆனந்தகுமாரின் மனைவி வேலைக்கு வெளியே சென்றிருந்ததால் அவரது குழந்தைகள் நடந்தவற்றை அழைபேசியில் தெரிவித்ததோடு அருகிலிருந்த பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் உடலை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தப்ப முயன்றவர்களை கைதுசெய்த போலீசார் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்திய நிலையில் சுரேஷ் மருத்துவ பரிசோதனையில் உயர் இரத்த அழுத்தம் காரணமாக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் போலிஸார் பாதுகாப்பில் உள்ளதைத் தொடர்ந்து உடல்நிலை சீரானதும் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவி கீதாவை திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கவும், சிறுவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள சிறார்சிறைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.