கோவை மாவட்டம் இடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுஜய்(28). இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டை சேர்ந்த ரேஷ்மா(25) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
பொள்ளாச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் இடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுஜய்(28). இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டை சேர்ந்த ரேஷ்மா(25) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பின்னர் பொள்ளாச்சி அடுத்த கவுரிநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். சுஜய் மனைவி கர்ப்பமாக இருப்பதால் பிரசவத்துக்காக கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று இடையர்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சுப்புலட்சுமி (20) என்பவர் சுஜய் வசிக்கும் கவுரிநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து ஆத்திரத்தில் சுஜய் சுப்புலட்சுமியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இளம்பெண் அலறல் சத்தத்தை அடுத்து அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுஜயின் வீட்டினுல் சென்று பார்த்த போது இளம்பெண் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில்;- சுஜய்க்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சுப்புலட்சுமியை காதலித்து வந்ததாகவும், பின்னர் சுஜய் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால், சுஜய் வீட்டுக்கு வந்து கல்லூரி மாணவி பிரச்சனை செய்துள்ளார். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுப்புலட்சுமியை 9 இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுஜயை மகாலிங்கபுரம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.