மேட்டுப்பாளையம் அருகே இளைஞர்களிடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றிய நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மர்ம நபர்கள் காரை ஏற்றியதில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கஸ்தூரி பாளையத்தைச் சேர்ந்தவர் அருள் பாண்டி. இவரும், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச்சேர்ந்த அருள்குமார், வசந்தகுமார் என மூவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு அருள் பாண்டி தனது இருசக்கர வாகனத்தில் நண்பர்கள் அருள்குமார், வசந்தகுமார் உள்ளிட்டோருடன் ஒரே வண்டியில் பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கோத்தகிரி வியூ பாயிண்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு காரில் வந்த ஒரு கும்பலுக்கும், அருள் பாண்டி மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருள் பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் மூவரும் அங்கிருந்து மீண்டும் மேட்டுப்பாளையம் நோக்கி திரும்பி உள்ளனர். அப்போது, சாலையின் குறுக்கே காட்டு யானை நின்று கொண்டிருந்ததால் இருசக்கர வாகனத்தினை நிறுத்தி மூவரும் அங்கேயே நின்றுள்ளனர்.
அப்போது, இவர்களுடன் தகராறில் ஈடுபட்ட அந்த கும்பல் மீண்டும் அருள் பாண்டி மற்றும் அவரது நண்பர்களை பார்த்ததும் காரை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அங்கிருந்து புறப்பட்டுச் செல்வது போல காரை எடுத்துக் சென்று திரும்பி வந்து இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்த மூவர் மீதும் காரை ஏற்றி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் அருள்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். வசந்த் மற்றும் அருள் குமார் இருவரும் படுகாயமடைந்த நிலையில், அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில், விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் போலீசார் இச்சம்பவத்தில் பலியான அருள்பாண்டியின் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்,இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் தனிப்படை அமைத்து அருள்பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் மீது காரை ஏற்றிய கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும், கோத்தகிரி வியூ பாயிண்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? திட்டமிட்டே நடந்த கொலையா? என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.