கை பம்பு அடித்தால் அருவியாக கொட்டும் சாராயம்.. 7 அடி ஆழத்தில் மதுக் கிணறு.. தலைச்சுற்றிப் போன போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Oct 12, 2022, 2:44 PM IST
Highlights

மத்திய பிரதேச மாநிலத்தில் கை பம்பு வைத்து கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  7 அடி ஆழத்தில் பேரல்கள் அமைத்து அதில்  கள்ளச் சாராயம் நிரப்பி அதன் மேல்  கைப்பம்பு வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது

மத்திய பிரதேச மாநிலத்தில் கை பம்பு வைத்து கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  7 அடி ஆழத்தில் பேரல்கள் அமைத்து அதில்  கள்ளச் சாராயம் நிரப்பி, அதன் மேல்  கைப்பம்பு வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. இதில் ஈடுபட்டு வந்த 8 பேரை கள்ளச்சாராய தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

உலகமெல்லாம் நீக்கமற  நிறைந்துள்ளது மது..  இந்தியாவில் மதுவை சில மாநிலங்களில் அரசே  விற்பனை செய்து  வந்தாலும், சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சாராய விற்பனை மறுபுறம் நடந்தேறி வருகிறது.  இதுபோன்ற கலப்படம் மற்றும் கள்ளச்சாராயங்கள் குடிப்பதால் கண்பார்வை இழப்பது, உயிரிழப்பது போன்ற  அபாயங்கள் நடந்தேறி வருகிறது. இந்த வரிசையில் மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் பல கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டிப் பறந்து வருகிறது. 

கள்ளச்சாராயத்தை அருந்தி பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் அங்கு நடந்தேறு வருகிறது. இந்நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அம்மாநில அரசு கள்ளச்சாராய தடுப்பு பிரிவை ஏற்படுத்தி அதைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில்தான் குணா மாவட்டம் சஞ்சோடா , ரகோகர் ஆகிய இரண்டு கிராமங்களில் கள்ள சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அக்கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கண்ட காட்சி போலீசாரை அதிர்ச்சியடைய வைத்தது.

இதையும் படியுங்கள்: கேரளாவில் 2 பெண்கள் நரபலி!துண்டு துண்டாக வெட்டிய உடலை சமைத்து சாப்பிட்ட கொடூரம்-குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

வயல்வெளிக்கு நடுவில் கைப்பம்பு ஒன்று தென்பட்டது. அதை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அந்த கைப்பம்பை அடித்து பார்த்தனர்.  அப்போது அந்த கைப்பையிலிருந்து சாராயம் கொட்டியது. இதை கண்ட போலீசார் மிகுந்த அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தனர். கைப்பம்பு அடித்தால் தண்ணீர்தானே வரும் இதில் என்ன சாராயம் வருகிறது? என அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு ஓன்றுமே புரியவில்லை, பின்னர் அப்பகுதியை நிதானமாக ஆராய்ந்தனர். அப்போதுதான் வயல்வெளிக்கு நடுவில் சாராய பீப்பாய்களில் புதைத்து,  அதன் மீது கை பம்பு அமைத்து, கள்ளச் சாராய கும்பல் சாராயம் விற்பனை செய்து வருவது அவர்களுக்கு புரிந்தது 

பின்னர் கைப்பம்புக்கு அடியில் தோண்ட ஆரம்பித்தனர், அப்போது அவர்கள் எதிர்ப் பார்த்த படியோ 7 அடி ஆழத்தில் பெரிய டோங்குகளை அமைத்து கள்ளச்சாராய கிணறு உருவாக்கப்பட்டிருந்தது கண்டுபிடித்தனர். பல்வேறு இடங்களில் காய்ச்சப்படும் சாராயத்தை கொண்டுவந்து இந்த சாராயக் கிணற்றில் ஊற்றி, கை பம்பு மூலம் கிராம மக்களுக்கு சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. அதன் பின்னர் புதைக்கப்பட்டிருந்த சாராய கிணற்றை தோண்டி மேலே எடுத்தனர், பலர் பேரல்கள் தோண்டி எடுக்கப்பட்டது. அவற்றில் இருந்த ஆயிரக்கணக்கான லிட்டர் கலப்பட சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையும் படியுங்கள்: ரவுடிகளை ரவுண்ட் கட்டும் தமிழக போலீஸ்.. புதுச்சேரியில் பதுங்கலா? சல்லடை போட்டு தீவிர தேடுதல் வேட்டை..!

சாராய பேரல்கள், ஊறல்களை போலீசார் அழித்தனர். கள்ளச் சாராய  கிணறு அமைத்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தாவர்கள் போலீசார் வருவதை கண்டு அங்கிருந்து தப்பி தலைமறைவாயினர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், 8 பேரை கைது செய்தனர். இதேபோல சஞ்சுட்டா,  பான்புரா உள்ளிட்ட  கிராமத்தைச் சேர்ந்த கஞ்சர் சமூகத்தினர் கலப்பட சாராயம் தயாரித்து விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது. பல இடங்களில் இருந்து சாராய சூளைகள், ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
 

click me!