திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே மனநல சிகிச்சை பெற்ற பெண்ணும், அவரது 6 மாத கைக்குழந்தையும் மூடப்பட்ட கல்குவாரி குட்டையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வடக்கு கும்பிகுளத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அப்பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வளர்மதி (வயது 29). இவர்களுக்கு ஐந்து வயது மற்றும் ஆறு மாத கைக்குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். வளர்மதி மனநலம் பாதிக்கப்பட்டு திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி வீட்டை விட்டு தனது ஆறு மாத கைக்குழந்தை வசுந்தராவுடன் வெளியே சென்ற வளர்மதி வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து அக்கம் பக்கத்தில் தேடியும் மனைவியும், கைக்குழந்தையும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து கண்ணன் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
நெல்லையில் மின்தடை நாளில் பழுது நீக்கிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி; உறவினர்கள் போராட்டம்
இந்நிலையில் இன்று அதிகாலையில் கும்பிகுளத்திற்கும், சமூகரெங்கபுரத்திற்கும் இடையே மூடப்பட்டு இருந்த கல்குவாரி குட்டையில் தண்ணீரில் இரு உடல்கள் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ராதாபுரம் காவல் துறையினர் மற்றும் வள்ளியூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தண்ணீரில் மிதந்த உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு 2 மாதங்களாக காத்திருக்கிறோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விசாரணையில் அவர்கள் காணாமல் போன வளர்மதியும் அவரது ஆறு மாத குழந்தை வசுந்தராவும் என தெரியவந்தது. மீட்கப்பட்ட உடல்களை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.