நீ என் சாதிதான் என்றார்..! தொடர்ந்து பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.. விஜய்சேதுபதி கடுங்கோபம்.!

By Asianet TamilFirst Published Nov 7, 2021, 5:29 PM IST
Highlights

அவர் நிலையறிந்து மன்னித்தேன். நான் ரசிகர்களிடம் எப்படி நடந்து கொள்வேன் என்பதை நாடறியும். தொடர்ந்து அவதூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளேன்.

பெங்களூரு விமான நிலையத்தில் மோதல் நடந்தது பற்றி விளக்கம் அளித்துள்ள நடிகர் விஜய்சேதுபதி, தன் மீது அவதூறு தொடர்ந்தால் வழக்கு தொடர்வேன் என்று எச்சரித்துள்ளார். 

கடந்த 3-ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சூழ நடந்துசென்ற நடிகர் விஜய் சேதுபதியை, பின்னால் ஓடி வந்த ஒரு நபர் எகிறி எட்டி உதைத்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. விஜய் சேதுபதி தாக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் விளக்கம் அளித்தனர்.

மேலும், விமான நிலையத்தில் விஜய் சேதுபதிக்கு வழி ஏற்படுத்தும் முயற்சியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் விஜய் சேதுபதியின் உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடந்ததாகவும் பெங்களூரு போலீஸார் தெரிவித்திருந்தனர். அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் பேசி சமாதானம் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் தாக்குதல் நடத்தியவர் மகா காந்தி என்பதும், நடிகர் விஜய்சேதுபதியோடு புகைப்படம் எடுக்கும் முயற்சியில்தான் மோதல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. 

இந்நிலையில் இதுதொடர்பாக பெங்களூரு போலீஸார் விசாரணையில் மகா காந்தி, தாக்கியது தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார். மேலும் விஜய்சேதுபதியுடன் நடந்த மோதல் குறித்தும் மகா காந்தியின் காணொலி வெளியானது. அதில், “அண்மையில் தேசிய விருது வாங்கிய விஜய் சேதுபதியிடம்  ‘விருது பெற்றதற்கு வாழ்த்துகள்’ என்றேன். குருபூஜைக்கு ஏன் வரவில்லை என்று அவரிடம் கேட்டேன். அதற்கு விஜய்சேதுபதி யார் குரு? என்று கேட்டார். தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே என்னை  தாக்கினார்கள். அதனால்தான் நான் திருப்பி தாக்கினேன். இதுதொடர்பாக விமான நிலைய சிசிடிவி காட்சிகளை கேட்டுள்ளேன். அதன்மூலம் அவர்கள் என்னை தாக்கியதை நிருபிப்பேன்" என்று தெரிவித்திருந்தார். 

இதற்கிடையே மகா காந்தியின் கருத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி எதிர்ப்பு தெரிவித்ததோடு, விளக்கும் அளித்துள்ளார். “அனைவருக்கும் வணக்கம். உங்கள் விஜய் சேதுபதி பேசுகிறேன். பெங்களூர் விமானத்தில் நிலைதவறிய நிலையில் ஒருவர் என்னை அணுகினார். நான் பிறகு பேசலாம் என்றேன். ஆனால், நீ என்  ஜாதிதான பேசுப்பா, நானும் நடிகந்தான் என்பது போல சத்தமாக கேட்டப்படி வந்தார். மற்றபடி அவர் காணொளியில் சொல்வது போல தேசியத்தையும் தெய்வீகத்தையும் அதே சமயம் தமிழர்களையும் தன் உயிராக கருதி வாழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் அய்யா குறித்து நான் எதுவும் பேசவில்லை.

அவர் நிலையறிந்து மன்னித்தேன். நான் ரசிகர்களிடம் எப்படி நடந்து கொள்வேன் என்பதை நாடறியும். தொடர்ந்து அவதூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளேன்.” என்று விஜய் சேதுபதி எச்சரித்துள்ளார்.
 

click me!