புதிய படங்கள் இனி வராது...அதிரடி அறிவிப்பை வெளியிட்டு... மத்திய, மாநில அரசை எச்சரிக்கும் டி.ராஜேந்தர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 10, 2020, 7:35 PM IST
Highlights

அதை நிறைவேற்றும் விதமாக இந்த மாதம் 27ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தர்களும் படங்களை வாங்கி விநியோகிப்பதில்லை என ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம் 

சினிமா டிக்கெட் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதால் சாமானியர்கள் குடும்பம், குடும்பமாக வருவது தியேட்டருக்கு வருவது குறைந்துவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. எப்படியாவது டிக்கெட் விலையை குறைத்தே தீருவேன் என்று தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பிற்கு தலைவராக பொறுப்பேற்றுள்ளார் டி.ராஜேந்தர். பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அதற்கான முயற்சிகளிலும் இறங்கிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். 

அதன் தொடர்ச்சியாக இன்று தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது திரைப்பட விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு 10 சதவீத டி.டி.எஸ். வரி செலுத்த வேண்டி உள்ளது. அதை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதை நிறைவேற்றும் விதமாக இந்த மாதம் 27ம் தேதி முதல் எந்த விநியோகஸ்தர்களும் படங்களை வாங்கி விநியோகிப்பதில்லை என ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம் என்றும், டி.டி.எஸ். வரியை நீக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தற்போது திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான 12 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 8% சதவிகித கேளிக்கை வரி செலுத்தப்படுகிறது. இது திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. அதனால், அந்த 8% கேளிக்கை வரியை, முற்றிலும் ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

click me!