நடிகர் சங்கத்திற்காக புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை கட்டி முடிக்க ரூ.40 கோடி கடன் வாங்க உள்ளதாக பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று காலை 10 மணியளவில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் தொடங்கிய இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளர் கார்த்தி, பொதுச்செயலாளர் விஷால் உள்பட நடிகர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் எதிர்கால திட்டமிடல் குறித்தும், பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிப்பது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் நடிகர் சங்க நிர்வாகிகளான கார்த்தி, நாசர் மற்றும் விஷால் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
இதையும் படியுங்கள்... இந்தியாவுல இருக்கோம்... எந்த பெயர் யார் வச்சாங்கன்றது தேவையில்லாத ஆணி - நடிகர் சித்தார்த் கோபம்
அப்போது நடிகர் விஷால் பேசியதாவது : “நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கண்டிப்பா அடுத்த பொதுக்குழு கூட்டத்தை புது கட்டிடத்தில் நடத்துவோம் என நம்புகிறேன். நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி இருக்கிறோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிப்பதற்காக மேலும் ரூ.40 கோடி கடன் வாங்க தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
புது கட்டிடத்திற்கு உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்திருப்பதால் விரைவில் நல்ல செய்தி வரும். கட்டிட வேலைகளை நிறுத்தி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் ஏற்கனவே உள்ள இரும்பு கம்பிகள் எல்லாம் துருபிடித்துவிட்டன. விரைவில் வங்கியின் கடன் பெற்று கட்டிடத்தை முடிக்கும் பணிகளை மேற்கொள்வோம். கட்டிடம் கட்டி முடித்ததும் முதல் நிகழ்வாக என்னுடைய திருமணம் இருக்கும் என விஷால் கூறினார்.
இதையும் படியுங்கள்... நண்பர்களே புது கார் வாங்கியாச்சு! பரம்பரையிலேயே புதுகார் வாங்கிய முதல் ஆள் நான் தான் - ஜிபி முத்து நெகிழ்ச்சி