ஓடிடியில் ரிலீசாக இருந்த விஷாலின் 'சக்ரா' படத்துக்கு ஆப்பு..! சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு..!

By manimegalai aFirst Published Sep 24, 2020, 1:12 PM IST
Highlights

சக்ரா திரைப்படத்தை ஓடிடி-நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சக்ரா' படத்தில் விஷால் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

இந்நிலையில் சக்ரா படம் தீபாவளிக்கும் ஓடிடி-யில் வெளியாகும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நடிகர் 
விஷால் பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் 'சக்ரா' படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

அதில் நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் தங்கள் நிறுவனத்திற்கு ஆனந்தன் கூறிய அதே கதையை தற்போது நடிகர் விஷால் தனது நிறுவனத்திற்கு சக்ரா என்ற பெயரில் எடுத்துள்ளதாகவும், அதனால் அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது ட்ரைடெண்ட் ஆர்டஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், ஓடிடி தளத்தில் படம் வெளியாக இருப்பதால் குறுகிய காலத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, நடிகர் விஷாலுக்கும், இயக்குனர் ஆனந்தனுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, செப் .30-க்குள் இரு தரப்பினரும் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் சக்ரா திரைப்படத்தை ஓடிடி-நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

click me!