
நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் அணியினரின் கை ஓங்கிக்கொண்டிருக்கும் நிலையில் நாடகநடிகர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவரான நடிகர் விஜயகாந்தும் இந்த அணியினரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவிருப்பதாகத் தெரிகிறது. இந்த அணியினருடனான சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களின் மூலம் விஜய்காந்தின் உடல் நலம் நன்கு தேறியுள்ளதும் தெளிவாகியுள்ளது.
வரும் 23ம் தேதி நடிகர் சங்கத்துக்குத் தேர்தல்நடைபெறவிருக்கும் நிலையில் விஷால், நாசர் தலைமையிலான ஒரு அணியும், பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையிலான ஒரு அணியும் கடும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருளாக கட்டி முடிக்கப்படாத நடிகர் சங்கக் கட்டிடம் இருந்து வரும் நிலையில், முக்கால் வாசி முடிந்த நிலையிலுள்ள க்கட்டிடத்தை நல்லபடியாக முடிக்க எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்று விஷால் அணியும், அவர்கள் கட்டிடத்தைக் கட்டி முடிப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை என்று பாக்யராஜ் அணியினரும் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.
இந்த இரு அணிகளில் நாசர் அணியை கமலும், பாக்யராஜ் அணியை ரஜினியும் வெளிப்படையாகவே ஆதரித்துள்ளனர். இந்நிலையில் இன்று தனது நிர்வாகிகளுடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, இயக்குநர் பாக்யராஜும், ஐசரி கணேசும் சந்தித்தனர். அச்சந்திப்புக்குப் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாக்யராஜ் தங்கள் அணியை விஜயகாந்த் முழு மனதாக ஆதரிப்பதாகவும் தங்களுக்காக போன் மூலமாக சக நடிகர்களுக்கும் , நாடக நடிகர்களுக்கும் பிரச்சாரம் செய்ய சம்மதித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் பாக்யராஜுடன் கேப்டன் விஜயகாந்தை சந்தித்த நிர்வாகிகள் சிலரிடம் விஜயகாந்தின் உடல்நலம் குறித்துப் பேசியபோது அவர் மிகவும் நல்ல முறையில் தேறிவிட்டதாகவும் அனைவரையுமே அடையாளம் கண்டு நலம் விசாரித்ததாகவும் தெரிவித்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.