’விஜயகாந்த் கண்டிப்பாக தேர்தல் பிரச்சாரத்துக்குப் போகக் கூடாது’...எச்சரிக்கும் டாக்டர்கள்...நச்சரிக்கும் ஓ.பி.எஸ்.,ஈ.பி.எஸ்....

By Muthurama LingamFirst Published Mar 21, 2019, 12:01 PM IST
Highlights

மேலும் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் அவரால் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன், நடிகரான சண்முக பாண்டியன் ஆகிய இருவரையும் பிரசாரத்தில் இறக்க தேமுதிக திட்டமிட்டுள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் உடல்நிலையில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படாததால் அவர் கண்டிப்பாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லக்கூடாது என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் எச்சரித்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான வேட்பாளர் பட்டியலையும் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதையடுத்து தேமுதிகவினரும் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ளார். அவரை அனைத்து கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய விஜயகாந்த் வருவாரா என்ற எதிர்பார்ப்பு கூட்டணி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. 

துவக்கத்தில் இதுகுறித்துப் பேசிய அக்கட்சியின் துணை செயலாளர் சுதிஷ்  “தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த் பங்கேற்பார். ஆனால், பொதுக்கூட்டங்களில் பேச மாட்டார்” என  ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால், தேமுதிக  தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.  ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், தற்போது அவருக்கு ஓய்வு தேவை. அவரை பிரசார மேடைக்கு அழைத்து சென்றால் சிகிச்சையில் பின்னடைவு ஏற்படலாம் என்று அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.  இதனால், விஜயகாந்தை பிரசார மேடைக்கு அழைத்து வரும் முடிவை முற்றிலும் தேமுதிக கைவிட்டு விட்டதாக பேசப்படுகிறது. அவருக்கு பதிலாக பிரேமலதா விஜயகாந்த் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். 

மேலும் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் அவரால் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன், நடிகரான சண்முக பாண்டியன் ஆகிய இருவரையும் பிரசாரத்தில் இறக்க தேமுதிக திட்டமிட்டுள்ளது.

 ஏற்கனவே விஜய பிரபாகரன் கூட்டணி இழுபறியின்போது மற்ற கட்சியினர் குறித்து தொண்டர்கள் மத்தியில் விமர்சனம் செய்தது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அரசியல் வட்டாரத்தில் விஜய பிரபாகரன் பேச்சு பரபரப்பாக பேசப்பட்டது.  இந்நிலையில் மகன்கள் இருவரையும் பிரசாரத்தில் இறக்கவும், அதற்கான சுற்றுப்பயணம் குறித்து பட்டியல் தயார் செய்து வருவதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜயகாந்தை பிரசாரத்திற்கு வரவேண்டாம், உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள் ஒருசில அரசியல்தலைவர்கள் மட்டும் ஆலோசனை கூறியுள்ள நிலையில், மிகப்பெரும் கூட்டங்களைச் சேர்க்கப் பயன்படுவார் விஜயகாந்த் என்று நம்பிய முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் பயங்கர அப்செட் ஆகிவிட்டதாகவும், மிக முக்கியமான கூட்டங்களிலாவது அவர் கலந்துகொள்ளவேண்டும் என்று பிரேமலதாவையும், சுதீஷையும் நச்சரித்து வருவதாகவும் தகவல்.

click me!