தமிழ்நாட்டில் திரையரங்குகளை கடந்த 23-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது.
காக்கமுட்டை திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகி திரையுலகினரின் கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. இந்நிலையில் மணிகண்டன் விஜய் சேதுபதியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் கடைசி விவசாயி.
இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் அனைத்தும் நிறைவடைந்தன. ஆனால் கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படத்தின் வெளியீடு தடைபட்டது. இதனால், படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. சோனி லைவ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு, படத்தை வெளியிடுவதற்கும் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்குகளை கடந்த 23-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. கடைசி விவசாயி திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளிடும் முடிவை படத்தின் தயாரிப்புக்குழு திரும்ப பெற்றுள்ளது. மேலும், படத்தை வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.